/tamil-ie/media/media_files/uploads/2018/06/duraimurugan-jeyalalitha.jpg)
Duraimurugan Drama, Jeyalalitha, Tamilnadu Assembly
துரைமுருகன் இருக்கிற இடம் கலகலப்பாகவே இருக்கும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று அவரது நகைச்சுவை பேச்சு அதற்கு ஒரு உதாரணமாக அமைந்தது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது நாட்டுப்புற கலைகளை ஊக்கப்படுத்துவது பற்றிய கேள்விக்கு அமைச்சர் மாபாய் பாண்டியராஜன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது 1 லட்சம் நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிட்டார்.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரான துரைமுருகன் அப்போது குறுக்கிட்டு, ‘நாடகக் கலையை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரதாஸ் சுவாமிகள், அருணாச்சல கவிராயர் ஆகியோர் எழுதிய வரிகளிலேயே அந்த நாடகங்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றார்.
அப்போது நடந்த விவாதம் வருமாறு:
சபாநாயகர் தனபால்: நீங்கள் (துரைமுருகன்) நாடகத்தில் நடித்திருக்கிறீர்களா?
துரைமுருகன்: நான் சிறு வயதில் பல நாடகங்களில் நடித்திருக்கிறேன். இப்போது இந்த சபையில் இருக்கும் எல்லோரும் ஒவ்வொரு வகையில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் கூறியது போல எல்லோருமே நடிகர்கள் தான். சபாநாயகர் உள்பட!
(அப்போது சபையில் சிரிப்பலை எழுந்தது).
துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: 2001- 2006-ம் ஆண்டு ஆட்சியின் போது துரைமுருகனை பார்த்து அன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா, ‘நீங்கள் சிறப்பாக நடிக்கிறீர்கள். நவரச நடிப்பும் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் நடிகராகி இருந்தால் உலக நடிகர் ஆகி இருக்கலாம்’ என்று சொன்னார். அந்த வார்த்தைதான் இப்போது என் நினைவுக்கு வருகிறது.
துரைமுருகன்: நான் சினிமாவுக்கு போயிருந்தால் சிறந்த நடிகர் ஆகியிருப்பேன் என்பது உண்மைதான். ஜெயலலிதாவுடன் நடிக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்திருக்கும்.
(துரைமுருகன் இவ்வாறு கூறியதும் அவை சிரிப்பில் ஆழ்ந்தது)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.