Advertisment

பா.ஜ.க.,வாக இருந்தால், போய் அந்த கட்சியில் சேர்ந்து விடுங்கள்; ஆளுனர் மீது துரைமுருகன் காட்டம்

மு.க ஸ்டாலின் இப்போது ரொம்பவே மாறி விட்டார். நான் கூட என்ன இப்படி ஆகி விட்டார் என்று ஆச்சரியப்பட்டேன். அவர் பாதி அண்ணாவாகவும், பாதி கருணாநிதியாகவும் மாறி விட்டார் – சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

author-image
WebDesk
New Update
durai murugan and ravi

அமைச்சர் துரைமுருகன் மற்றும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.ரவி

ஆளுநர் மாளிகையில் ஒளிரபரப்பான சுதந்திர போராட்ட வீரர்கள் படத்தில், காந்தியும் இல்லை, நேருவும் இல்லை, ஆனால் சாவர்க்கர் அடிக்கடி காட்டப்பட்டார் என சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Advertisment

ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

இதையும் படியுங்கள்: ரூ. 11.32 கோடிக்கு கணக்கு இல்லை; ஆளுனருக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்பட்டதில் முறைகேடு; பி.டி.ஆர்

இந்த தீர்மானத்தின் மீது பேசிய அமைச்சர் துரைமுருகன், இந்த தீர்மானத்தை சரியான நேரத்தில் நமது முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். அந்தத் தீர்மானத்தில் கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் நாகரீகத்தோடு நியாயத்தை எடுத்துரைக்கிற வகையில் காழ்ப்புணர்ச்சி சிறிதுமின்றி வாக்கியங்கள் அமைக்கப்பட்டிருப்பதை நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். ஒரு கனத்த இதயத்தோடுத்தான் இந்த தீர்மானத்தை முதல்வர் கொண்டு வந்திருப்பார்.

சட்டமன்ற விதிகளை தளர்த்துவது எப்படி என கற்றுக் கொடுத்தவர்கள் அவர்கள்தான் (அ.தி.மு.க.,வினர்). ஆளுநர் பதவி தேவையில்லை என்பது எங்கள் கட்சி தோன்றியபோதே பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாங்களெல்லாம் ஆளுங்கட்சியாக வருவோமோ என்று தெரியாதபோதே கவர்னர் தேவையில்லை என்று தெரிவித்த கட்சி தி.மு.க. அரசியல் நிர்ணய சபையில் பேசியவர்கள் கூட ஆளுநர் தேவையில்லை என்றுதான் சிலர் சொன்னார்கள். ஆனால் மத்திய அரசுக்கு மாநில அரசை ஆட்டிப்படைக்கவும், 365 சட்டப்பிரிவை பயன்படுத்தி கலைக்க தங்களுக்கு ஒரு ஏஜெண்டு வேண்டும் என்றும் ஆளுநர் பதவியை உருவாக்கினார்கள்.

பல மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்களுக்கெல்லாம் காரணம் ஆளுநர்கள்தான். முதன்முதலாக தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை கலைத்தது கேரளாவில் நம்பூதிரிபாட் ஆட்சியைத்தான். மேற்கு வங்கத்தில் மம்தாவோடு செய்த தகராறு காரணமாக சபாஷ் கொட்டி அவரை ராஜ்யசபா தலைவராக்கி உள்ளார்கள். அதை பார்த்துதான் நமது ஆளுநருக்கு ஒரு நப்பாசை.

ஆளுநரை போய் பலமுறை நாங்கள் பார்த்துள்ளோம். முதல்வரோடு நான் போயுள்ளேன், பேசி உள்ளோம். ஆனால் பேசினோமே தவிர காரியம் ஒன்றும் நடக்கவில்லை. இவர் மனதில் ஒரு மாதிரியாக உள்ளே வைத்துக் கொண்டு பேசுகிறார். அவர் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது என்பது நிராகரிக்கப்பட்டது என்று அர்த்தம் என கவர்னர் பெருமையாக கூறி வருகிறார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக இருப்பவர்கள் கவர்னராக மட்டும் அல்ல, இந்திய குடிமகனாகவே இருக்க தகுதியற்றவர்கள். உங்களுக்கு ஒரு கட்சிக் கொள்கை இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு போங்கள்.

நமது தலைவர் மு.க ஸ்டாலின் இப்போது ரொம்பவே மாறி விட்டார். நான் கூட என்ன இப்படி ஆகி விட்டார் என்று ஆச்சரியப்பட்டேன். அவர் பாதி அண்ணாவாகவும், பாதி கருணாநிதியாகவும் மாறி விட்டார் என கூறினார்.

முதலில் நகைச்சுவையாக பேசிய துரைமுருகன், பின்னர் கோபமாக பேசினார். ஆளுநர் மாளிகையில் ஒளிரபரப்பான சுதந்திர போராட்ட வீரர்கள் படத்தில், காந்தியும் இல்லை, நேருவும் இல்லை, ஆனால் சாவர்க்கர் அடிக்கடி காட்டப்பட்டார். காந்தி இல்லாமல் சுதந்திர போராட்டமா?, யார் அப்பன் வீட்டு பணத்தை வைத்து அவர் இல்லாத படத்தை காட்டுகிறீர்கள்? பா.ஜ.க.,வாக இருந்தால், போய் அந்த கட்சியில் சேர்ந்து விடுங்கள் என கோபமாகக் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Governor Rn Ravi Duraimurugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment