தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 20-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையும், மார்ச் 21-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து முடிந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் பதிலளித்து பேசினார்கள்.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 29) நீர்வளத்துறை மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்றது. நீர்வளத் துறை மானியக் கோரிக்கைகளுக்கு பதிலளித்துப் பேசிய நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேள்விக் கேட்பதும், வெட்டுத்தீர்மானங்களை தருவதும் உறுப்பினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். அதற்காக உறுப்பினர்களுக்கு நன்றி.
1989-ம் ஆண்டில் இருந்து எப்பொதெல்லாம் அமைச்சராக உள்ளேனோ அப்போதெல்லாம் இந்த துறைசார்பில் நான் தான் பதில் சொல்லி வருகிறேன்.
நீர்வளத்துறைதான் எனக்கு வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டேன். ஆனால், பொதுப்பணித்துறை என்ற பெயர் இருக்காது என்று முதல்வர் சொன்னார். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை; ஆனால் இந்த துறையில்தான் விவசாயிக்கு ஏதாவது செய்ய முடியும் என்று கருதுகிறவன்.
என்னை பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலம் கட்சியில் இருந்தவன், இன்னும் இருக்கபோகிறவன், என்றைக்காவது ஒருநாள் மறையப்போகிறவன்.
நான் மறைந்துவிட்ட அன்று எனக்காக எழுப்பப்படும் சமாதியில் ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என்று எழுதினால் போதும் என உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய படி பேசினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, ‘இன்னும் நூறாண்டுகளை கடந்து வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்’ என்று கூறினார்.
அதற்கு, அமைச்சர் துரைமுருகன் ‘நிச்சயமாக’ என்று கூறியதால் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் இடையே பெரும் சிரிப்பலை ஏற்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"