மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவு நாளையோட்டி திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், திமுக எம்.பி கனிமொழி பேசிக்கொண்டிருக்கும்போது, அமைச்சர் துரைமுருகன் திடீரென நிகழ்ச்சிக்கு வந்ததைப் பார்த்த கனிமொழி பேச்சை நிறுத்திவிட்டு மேடையை விட்டு கீழே இறங்கிச் சென்று கையைப் பிடித்து மேடைக்கு அழைத்து வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மறைந்த திமுக தலைவர் மு.க. கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அணுசரிக்கப்பட்டது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு திமுக மகளிரணி சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி, அமைச்சர் க. பொன்முடி, மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கருத்தரங்கில் திமுக எம்.பி கனிமொழி பங்கேற்று பேசினார். கனிமொழி பேசிக்கொண்டிருக்கும்போது, திமுக பொதுச் செயலாளரும் பொதுப்பணித் துறை அமைச்சருமான துரைமுருகன் திடீரென கருத்தரங்குக்கு வந்தார். மேடையில் பேசிக்கொண்டிருந்த கனிமொழி துரைமுருகன் வந்திருப்பதைப் பார்த்ததும் உடனே பேச்சை நிறுத்திவிட்டு, மேடையைவிட்டு கீழே இறங்கி வந்து துரைமுருகனை கைகளைப் பிடித்து மேடைக்கு வருமாறு அழைத்தார். ஆனால், துரைமுருகன் பரவாயில்லை இங்கேயே அமர்ந்துகொள்கிறேன் என்று கூறினார். ஆனாலும், கனிமொழி விடாமல், அவரை மேடைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தார்.
கருணாநிதியின் மகளும் திமுக மகளிரணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு அளித்த மரியாதை அரங்கில் இருந்த அனைவரின் கவனத்தையும் பெற்றது. கனிமொழி மேடையில் இருந்து இறங்கி வந்து துரைமுருகனை கைகளைப் பிடித்து மேடைக்கு அழைத்துச் சென்ற சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"