போயிட்டு வந்தப் பிறகு கேள்வி கேட்டா பதில் சொல்லலாம். போகும்போதே கேட்டா என்ன பதில் சொல்வது, போய் வருகிறேன் என்று தான் சொல்ல முடியும் என காவிரி விவகாரம் தொடர்பாக டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சீற்றத்துடன் கூறினார்.
தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிடுமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் சந்தித்து இன்று கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இந்த சந்திப்பு இன்று மாலை நடைபெற உள்ளது.
மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஜோதிமணி (காங்கிரஸ்), தம்பிதுரை (அ.தி.மு.க.), கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்ட்), பி.ஆர். .நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), வைகோ (ம.தி.மு.க.), திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), ஜி.கே.வாசன் (த.மா.கா.), அன்புமணி ராமதாஸ் (பா.ம.க.), நவாஸ்கனி (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), ஏ.கே.பி.சின்னராஜ் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) ஆகியோர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
மத்திய அமைச்சரை சந்திக்கும் போது, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு தேவையான அறிவுரைகளை வழங்க தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் கிடைக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர்.
இதனிடையே அமைச்சர் துரை முருகன் இன்று காலையில் டெல்லி சென்றார். அப்போது செய்தியாளர்கள் கேள்வி எழுப்பவே, போயிட்டு வந்தப் பிறகு கேள்வி கேட்டா பதில் சொல்லலாம். போகும்போதே கேட்டா என்ன பதில் சொல்வது, போய் வருகிறேன் என்று தான் சொல்ல முடியும் என்று கூறினார்.
அப்போது, இந்தச் சந்திப்பில் என்னென்ன விஷயங்கள் பேசப் போகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, என்னென்ன விஷயங்கள் என உங்களுக்குத் தெரியாதா என துரைமுருகன் சீறினார். மேலும், கர்நாடகா தண்ணீர் திறந்த விட உத்தரவிட வேண்டும் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்போகிறோம், அவ்வளவு தான் என்றார். ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெறுவது தொடர்பான கேள்விக்கு அது வேறு விஷயம் என்று அமைச்சர் கூறினார்.
மத்திய அமைச்சரை இதற்கு முன்னர் 2 முறை சந்தித்து உள்ளோம். இந்த விஷயத்தில் அவர் நடுநிலை வகிக்கிறாரா என்ற கேள்விக்கு, அப்படிச் சொல்ல முடியாது. இதற்கு முன்னர் தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. இந்த முறை திறக்கவில்லை. அதை வலியுறுத்தப்போகிறோம் என்று துரைமுருகன் கூறினார்.
இன்றைய காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், நமக்கு சாதகமாக முடிவுகள் வருமா என்ற கேள்விக்கு, நான் என்ன ஜோசியமா வச்சிருக்கேன்? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசு எப்படி செயல்பட வேண்டும் என்ற கேள்விக்கு, தண்ணீர் திறந்து விடணும் அவ்வளவு தான் என துரைமுருகன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.