காட்பாடியில் பள்ளி நிகழ்ச்சியில் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அமைச்சர் துரைமுருகன் பேச முடியாமல் தவித்த விவாகரத்தில் மின் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
இதையும் படியுங்கள்: என்னை மிரட்டிப் பார்க்க ஸ்டாலின் நினைத்தால் முடியாது: ரெய்டுக்கு பிறகு எஸ்.பி வேலுமணி பேட்டி
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய துரைமுருகன் தனது பள்ளி நாட்களை நினைவு கூர்ந்து உரையாற்றி வந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், உரையாற்ற முடியாமல் தவித்தார் அமைச்சர் துரைமுருகன். சற்று நேரம் காத்திருந்தும் மின்சாரம் வராததால் அப்செட் ஆன கடுப்பான அமைச்சர், இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் மின் வாரியத்தை தொடர்பு கொண்டபோது உடனடியாக மின்சாரம் வந்து விடும் என்று கூறியே, 10 நிமிடங்களுக்கும் மேலாக மின்சாரம் வரவில்லை. இதனால் டென்ஷனான அமைச்சர் துரைமுருகன், அவசர அவசரமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு சென்றார்.
இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் பணியிடமாற்றம் செய்துள்ளனர். காட்பாடி பகுதி துணை மின்நிலைய உதவி பொறியாளர்கள் சிவகுமார் ,கருணாநிதி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அமைச்சர் துரைமுருகன் செல்லும் நிகழ்ச்சிகளில் மின்வெட்டு ஏற்படாதவாறு தேவையான ஏற்பாடுகளை செய்யும்படியும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil