வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க சார்பில் காட்பாடி சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், “தேர்தல் எப்படி நடக்கும், எப்படி நம்ம கட்சியில் வியூகம் வகுப்பார்கள், எப்படி எதிர்க்கட்சியில் வியூகம் வகுப்பார்கள் என்பது எனக்கு தெரியும். நான் ஒவ்வொருவரை பற்றியும் இங்கு நன்கு தெரிந்து வைத்துள்ளேன்.. என்னை இனி யாரும் ஏமாற்ற முடியாது. போன முறை நான் ஏமாந்துவிட்டேன். அது கொரோனா காலத்தில் நடந்தது. அப்போது என்னால் வெளியில் வேகமாக வரவும் போகவும் முடியவில்லை. இல்லை என்றால் நான் கண்ணில் விரலை விட்டு ஆட்டி இருப்பேன்.” என்று பேசினார்.
காட்பாடி சட்டமன்றத் தொகுதி தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “சில துரோகங்களை எனக்கு எதிராக சிலர் சேர்ந்து நடத்தினார்கள். ஆனால், அது எனக்கு தெரியும். துரோகிகளை களையெடுத்துவிட்டு தேர்தலை வெற்றிகரமாக நடத்தக்கூடிய ஆற்றல் இந்த துரைமுருகனுக்கு உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் யாரையும் மன்னிப்பேன். ஆனால், கட்சிக்கு துரோகம் செய்பவர்களை மன்னிக்க மாட்டேன். என்னை கொல்ல வந்தால்கூட மன்னிப்பேன். ஆனால். என் இயக்கத்திற்கு (தி.மு.க) துரோகம் செய்வோரை நான் மன்னிக்கவே மாட்டேன்.” என்று துரைமுருகன் எச்சரித்துப் பேசினார்.
மேலும், “60- 70 ஆண்டுகள் இந்த கட்சியை நான் வளர்த்தவன் . ஆகையால் இது எனது கட்சி, நம்முடைய கட்சி என்ற புத்தியோடு இருக்கிறேன். அந்த கட்சிக்கு துரோகம் செய்பவதை விட வேறு கொடுமை இருக்க முடியாது. போன முறை நான் எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து இருந்தேன். அதனால் சில பாடங்கள் கற்றுக்கொண்டேன். அந்த பாடத்தை திரும்பி பார்க்க மாட்டேன்” என்று அமைச்சர் துரைமுருகன் காட்பாடி சட்டமன்றத் தொகுதி தி.மு.க வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசியிருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“