துரைமுருகன் ரொம்ப இளமையா இருக்காரு..! சபையில் ஓபிஎஸ் கலகலப்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘துரைமுருகன் இன்று 16 வயது போல இளமையாக இருக்கிறார். உங்கள் இளமை ரகசியம் என்ன?’ என கேள்வி எழுப்பினார்.

துரைமுருகன் ரொம்ப இளமையா இருக்காரு என தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலகலப்பாக பேசினார். துரைமுருகன், ‘அம்மா அரசு’ என்றார்.

துரைமுருகன் கலகலப்பு பேச்சுக்கு சொந்தக் காரர்! இன்று (ஜூன் 7) காலையில் சட்டமன்றத்தில் ஸ்டெர்லைட் பிரச்னை விவாதம், திமுக வெளிநடப்பு என காரசாரம் இருந்தாலும், பிற்பகலில் தென்றல் வீசியது.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. லோகநாதன் எழுந்து தனது தொகுதியை தனி வட்டமாக (தாலுகா) பிரித்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் அளிக்கையில், ‘அம்மா அரசு ஏற்கனவே 72 வட்டங்களை புதிதாக உருவாக்கியிருக்கிறது’ என்றார்.

அப்போது எழுந்த எதிர்க்கட்சித் துணைத்தலைவரான துரைமுருகன், ‘அம்மா அரசு 73-வது வட்டத்தையும் உருவாக்க வேண்டும்’ என்றார். திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன், ‘அம்மா அரசு’ என அழைத்ததால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

ஓபிஎஸ் எழுந்து, ‘அம்மா அரசு என குறிப்பிட்டதற்காக நன்றி’ என்றார். துரைமுருகன் சளைக்காமல், ‘புதிய வட்டம் அறிவித்தால் எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்கிறேன்’ என்றார். கே.வி.குப்பம் தொகுதி, துரைமுருகனின் காட்பாடிக்கு பக்கத்து தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ‘துரைமுருகன் இன்று 16 வயது போல இளமையாக இருக்கிறார். உங்கள் இளமை ரகசியம் என்ன?’ என கேள்வி எழுப்பினார். இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது. சட்டமன்றத்தில் திமுக, அதிமுக இடையே மிக அபூர்வமான காட்சிகளாக இவை அமைந்தன.

 

×Close
×Close