ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவில் உள்ளடி வேலை செய்து துரோகம் செய்தால் கட்சிக்குத் துரோகம் செய்கிறவன் எவ்வளவுப் பெரிய ஆளாக இருந்தாலும், 24 மணி நேரத்தில் கட்டம் கட்டிவிடுவேன் என்று சம்பத், எம்ஜிஆர், வைகோ… துரோகங்களை பட்டியலிட்டு துரைமுருகன் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஆளும் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன், ஆரம்பத்தில் அமைதியாகவும் பிறகு போகப் போக மிகவும் ஆவேசமாகவும் பேசினார். துரோகம் செய்தால், கட்சிக்குத் துரோகம் செய்கிறவன் எவ்வளவுப் பெரிய ஆளாக இருந்தாலும் 24 மணி நேரத்தில் கட்டம் கட்டிவிடுவேன் என்று திமுகவில் உள்ளடி வேலை செய்ய முயற்சிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
ஜோலார்பேட்டையில் திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது: “உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கெல்லாம் சீட் விட்டுப்போனதோ அவர்களுக்கெல்லாம் உரிய பதவிகள் தரப்படும். யாரும் அவசரப்படாதீங்க. கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களை நானே கட்டம் கட்டிவிடுவேன். சீட் கிடைக்காத ஆத்திரத்தில் எங்களை அடித்தால்கூட வாங்கிக்கொள்வோம். உங்களுக்கு உரிமையுண்டு. ஆனால், கட்சிக்குத் துரோகம் செய்கிறவன் எவ்வளவுப் பெரிய ஆளாக இருந்தாலும், இந்த துரைமுருகன் நினைத்தால் 24 மணி நேரத்தில் கட்டம் கட்டிவிடுவான். எத்தனை காலத்துக்குத் துரோகிகளையே பார்த்துக்கொண்டிருப்பது. அண்ணா காலத்தில் சம்பத்தைப் பார்த்தோம். அதன்பின் எம்.ஜி.ஆரைப் பார்த்தோம். அப்புறம் கோபால்சாமியைப் பார்த்துள்ளோம். இனிமேல் அப்படி பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். கட்டுப்பாடுடன் இருங்கள். நமக்குத் தெரியாத தேர்தல் வித்தைகளில்லை. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர் மூலமாக பட்டியல் பெறப்பட்ட பின் தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு சொசைட்டிகளிலும், வாரியங்களிலும் உரிய பதவிகள் வழங்கப்படும்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.