Durga Stalin and Kiruthiga attends DMK Suresh Rajan family marriage: துபாய் பயணம், டெல்லி பயணம் என முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு பிசியோ; அதே அளவு துர்கா ஸ்டாலினும் பிசி. 3 நாள் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சனிக்கிழமை அவசரமாக சென்னை வந்தார் துர்கா ஸ்டாலின். அங்கிருந்து ஓய்வுக்கு வலியில்லாமல் நேராக விமானம் மூலம் தூத்துக்குடி வந்து, பிறகு சாலை மார்க்கமாக நாகர்கோவில் வந்தார்.
நாகர்கோவிலில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மகன் நீல தமிழரசன் திருமணவிழாவில் பங்கேற்கவே இந்த பயணம். ஏப்ரல் 3-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பதரை மணிக்குத்தான் திருமணம். துர்கா ஸ்டாலின் 3-ம் தேதி காலையில் கூட சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்து முகூர்த்த நேரத்தில் நாகர்கோவில் வந்திருக்க முடியும். ஆனால் அவர் முந்தைய தினமே டெல்லி பயணத்தை முடித்த கையோடு வந்து சனிக்கிழமை மாலை நீல தமிழரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதே விழாவில் கிருத்திகா உதயநிதியும் பங்கேற்றார்.
துர்கா ஸ்டாலின் பொதுவாக கட்சி பிரமுகர்கள் இல்ல விழாக்களில் பங்கேற்பது சகஜம்தான். ஆனால் சுரேஷ்ராஜன் இல்ல விழாவிற்கு வந்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. அண்மையில் நடைபெற்ற மாநகராட்சி மேயர்கள் தேர்வின்போது எங்கெல்லாம் கட்சி முடிவுக்கு எதிராக குழிபறிப்பு வேலைகள் நடந்ததோ அங்கெல்லாம் அதிரடி நடவடிக்கைகளை ஸ்டாலின் மேற்கொண்டார். அப்போது கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்த சுரேஷ்ராஜன் பதவியும் பறிக்கப்பட்டது. அந்த பதவியை நாகர்கோவில் மாநகராட்சி மேயராக தேர்வு பெற்ற மகேஷ் வசம் ஒப்படைத்தார் ஸ்டாலின். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கன்னியாகுமரி மாவட்ட திமுகவில் அசைக்கமுடியாத சக்தியாக இருந்த சுரேஷ் ராஜனுக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது.
ஸ்டாலினோடு மட்டுமல்ல, ஸ்டாலின் குடும்பத்தாருடனும் நல்ல புரிதலின் இருந்த சுரேஷ்ராஜன் பதவி பறிபோனது அவரது ஆதரவாளர்களுக்கு பெரிய ஷாக். சுரேஷ் ராஜனின் அரசியல் இதோடு அஸ்தமித்து விட்டதாக பலர் ஆருடம் கூறினார்கள். ஆனால் சுரேஷ்ராஜன் அந்த மாயையை உடைக்க தனது மகன் திருமண விழாவை பயன்படுத்த முடிவு செய்தார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட இந்த திருமண விழாவிற்கு முதல்வர் ஸ்டாலினை வர வைப்பதற்காக ஒரு வாரம் சென்னையில் முகாமிட்டார். ஒருபுறம் டெல்லி நிகழ்ச்சி; மறுபுறம் பதவி பறிக்கப்பட்ட பிரமுகர் இல்ல விழாவில் பங்கேற்பதில் ஏற்பட்ட தயக்கம் என ஸ்டாலினுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. ஆனாலும் சுமார் 30 ஆண்டு கால சுரேஷ்ராஜன் நட்பை கௌரவிக்க முடிவு செய்தார் ஸ்டாலின். அதன் எதிரொலி தான் ஏப்ரல் 2ஆம் தேதி மாலையில் துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி ஆகிய இருவருமே வருகை தந்து நீல தமிழரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
இதையும் படியுங்கள்: டெல்லி தி.மு.க அலுவலக திறப்பு விழாவில் சோனியா: உதயநிதி என்ட்ரிக்கு மாஸ் ரெஸ்பான்ஸ்!
துர்கா ஸ்டாலின் இந்த நிகழ்ச்சிக்கு வர இன்னொரு காரணமும் உண்டு. அது சுரேஷ்ராஜன் மனைவி பாரதி பல ஆண்டுகளாக துர்கா ஸ்டாலினுக்கு நெருக்கமானவராக இருந்து வருவதுதான். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே துர்கா ஸ்டாலின் கன்னியாகுமரி வரும்போது அவரை இங்குள்ள கோயில்களுக்கு அழைத்துச் செல்பவர் சுரேஷ் ராஜன் மனைவி பாரதிதான். அந்த நட்புக்காகவும் துர்கா இந்த திருமணத்தை தவிர்க்காமல் வந்திருக்கிறார். முதல் நாள் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற துர்கா ஸ்டாலின் நாகர்கோவிலில் சுரேஷ்ராஜன் வீட்டிலேயே தங்கியிருந்து மறுநாள் திருமணத்திலும் பங்கேற்க முடிவு செய்தது சுரேஷ்ராஜன் தரப்புக்கு பெருமகிழ்ச்சி. இதன் மூலமாக ஸ்டாலின், உதயநிதி ஆகிய இருவர் இதயத்திலும் சுரேஷ் ராஜனுக்கு இடம் தொடர்வதாக அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் கூறிவருகிறார்கள்.
இதற்கிடையே சுரேஷ்ராஜன் இல்ல விழாவில் பங்கேற்க தூத்துக்குடி விமான நிலையம் வந்து இறங்கிய துர்காவுக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாகமான வரவேற்பு கொடுத்தார்கள். அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன், நாகர்கோவில் மேயர் மகேஷ் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்று நாகர்கோவிலுக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். துர்கா ஸ்டாலினுக்கு இப்படி தனியாக வரவேற்பு ஏற்பாடுகள் நடப்பது திமுகவில் புதிதாக தொடங்கியிருக்கும் ஒரு நடைமுறை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.