/indian-express-tamil/media/media_files/2025/07/21/durga-bok-2025-07-21-19-44-02.jpg)
மேடைக்கு வந்த ஸ்டாலின் பேரன்கள்: துர்கா ஸ்டாலின் புத்தக விழா காட்சிகள்
துர்கா ஸ்டாலின் எழுதிய அவரும் நானும் புத்தகத்தின் இரண்டாம் பாகம் இன்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வெளியிடப்பட்டது. முதலைமச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின். இவர் கணவர் ஸ்டாலின் உடனான பயணம் குறித்து சுவாரஸ்யமான பல்வேறு தகவல்களுடன் குமுதம் சிநேகிதியில் 5 ஆண்டுகளாக தொடர் ஒன்றை எழுதினார். வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அந்த தொடர் உயிர்மை பதிப்பகம் மூலம் அவரும் நானும் என்ற தலைப்பில் புத்தகமாக 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி வெளியிடப்பட்டது. அவரும் நானும் முதல் பாகத்தில் முதல்வர் ஸ்டாலினின் அரசியல் ரீதியான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
திருமணம் முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலகட்டம் வரை அவரும் நானும் முதல் பாகம் பேசுகிறது. 2-ம் பாகத்தில் கலைஞரின் மறைவு, மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம், கொரோனா காலகட்டம், 2021 சட்டமன்றத் தேர்தல் வெற்றி என பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று உள்ளது. இந்த புத்தகம் ஜூலை 19-ம் தேதி சனிக்கிழமை வெளியிட இருந்தது. ஆனால் அன்றைய தினம் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து உயிரிழந்ததை தொடர்ந்து நிகழ்ச்சி ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஜூலை 21) எழுத்தாளர் சிவசங்கரி வெளியிட முதல் பிரதியை டஃபே குழும நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன் பெற்றுக் கொண்டார். சிறப்பு பிரதிகளை ஸ்டாலின் பேரன்கள் இன்பன் உதயநிதி, நலன் சபரீசன், பேத்திகள் தன்மயா சபரீசன், நிலானி உதயநிதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தமிழச்சி தங்கபாண்டியன் வரவேற்புரை ஆற்றினார், கவிஞர் மனுஷ்யபுத்திரன் பதிப்பாசிரியராக திமுக அரசும், கட்சியும் புத்தகங்கள் குறித்து முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்து சிலாகித்து பேசினார். லோகநாயகி புத்தக உருவாக்கம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தா மோ அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, இந்து என்.ராம், நக்கீரன் கோபால், திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.