மகா சிவராத்திரி விழாவையொட்டி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், சென்னை மயிலாப்பூர், ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மகா சிவராத்திரி விழா திங்கள்கிழமை (மார்ச் 1) மாலை 6 மணிக்கு தொடங்கியது.
மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஏற்பாடு செய்யப்பட்ட மகா சிவராத்திரி விழாவுக்கு அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமை தாங்கினார். மகா சிவராத்திரி விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்த மகா சிவராத்திரி விழாவில் திமுக எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், திமுக எம்.எல்.ஏ தா.வேலு, அரசு செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், இணை-ஆணையர்கள் தா.காவேரி, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் பெ.ஜெயராமன், உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் தேச மங்கையர்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மகா சிவராத்திரி விழாவில், இரவு முழுவதும் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மயிலை கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற, திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் விழாவை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றது குறித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “இன்று (01.03.2022), மயிலாப்பூர் - அருள்மிகு மயிலை கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெறும் "மகா சிவராத்திரி விழா-2022" நிகழ்ச்சியினை, மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேனாள் ஒன்றிய அமைச்சர் ஜெகத்ரட்சகன் எம்.பி, நான், தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மயிலை தா.வேலு எம்.எல்.ஏ, ஆலயத் தக்கார் விஜயகுமார் ரெட்டி, அறநிலையத் துறைச் செயலர் ஆகியோர் துவக்கி வைத்தோம்.” என்று தமிழச்சி தங்கபாண்டியன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் தொடர்ந்து கோயில்களுக்கு செல்வதை திராவிட கடும்போக்காளர்களாலும் திமுக விமர்சகர்களாலும் பாஜகவினராலும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், துர்கா ஸ்டாலின் தான் தான் தொடர்ந்து கோயில்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது மயிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட மகா சிவாராத்திரி விழாவில் கலந்துகொண்டு விழாவை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
அண்மையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற மாயையை சுக்குநூறாக உடைத்திருக்கிறோம்.” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"