பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் இருந்து மாறுபட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா கூறினாலும், தி.மு.க-வின் மூத்த தலைவர்கள், அண்ணா, கருணாநிதி, அன்பழகன் என பலரும் கடவுள் மறுப்பு கொள்கையுடன் இருந்தனர். தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அந்த மரபில் தொடர்பவர்களாகவே முன்னிறுத்தப்படுகின்றனர். இருப்பினும், மற்றவர்களின் கடவுள் நம்பிக்கையில் தலையிடுவதில்லை, அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் கடவுள் நம்பிக்கையிலும் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேடைக்கு மேடை திராவிட இயக்கக் கொள்கைகளைப் பேசினாலும்ம், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் கோயில் கோயிலாக செல்லும் தீவிர கடவுள் நம்பிக்கையாளர். கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பல கோயில்களுக்கு சென்று பிரார்த்தனை செய்வதோடு, அந்த கோயில்களின் திருவிழாக்களிலும் கலந்த்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், மயிலாடுதுறையில், திருவெண்காட்டில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின், கொட்டும் மழையில் ரெயின் கோட் அணிந்தபடி பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், திருவெண்காட்டில் உள்ள் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்த கோயில் தேவாரம் பாடல் பெற்ற தலமாகும். இந்த கோயிலில், சிவபெருமானின் 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தி மற்றும் நவகிரகங்களில் புதன் பகவான் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த கோயிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை அகோர மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
இந்த கோயிலின் அகோரமூர்த்தி குறித்து ஒரு புராண கதை உள்ளது. ஒரு காலத்தில் மருத்துவாசூரன் என்ற அசுரன் ஈசனிடம் பெற்ற சூலாயுதத்தை கொண்டு தேவர்கள், முனிவர்களை சதா சர்வகாலமும் துன்புறுத்தி வந்தான். இதனால் கோபமடைந்த நந்தி தேவர், அந்த அசுரனுடன் போர் புரிய தயாராகி சென்றார். அவரை மருத்துவாசூரன் 9 இடங்களில் சூலாயுதத்தால் குத்தி காயமடையச் செய்துவிட்டான். இதனால், பெருங்கோபம் அடைந்த சிவபெருமான், தனது 5 முகங்களில் ஒன்றான அகோர மூர்த்தியாக அசுரனை அழிக்க துணிந்தபோது, அவரை கண்டு அஞ்சி நடுங்கிய மருத்துவாசூரன், சிவ பெருமானிடம் சரணடைந்தான் என்ற புராணக் கதை உள்ளது.
சிவபெருமான் சாந்தம் அடைந்ததைக் குறிப்பிட்டு வழிபாடு செய்யும் விதமாக, ஆண்டுதோறும் கார்த்திகை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அகோர மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அந்த வகையில், திருவெண்காடு, பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் அகோர மூர்த்திக்கு இந்த ஆண்டு கார்த்திகை மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை கடந்த டிசம்பர் 1-ம் தேதி மகா அபிஷேகம் நடைபெற்றது. இந்த மகா அபிஷேகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்தனர். அப்போது, அங்கே மழை பெய்தது. கொட்டும் மழையிலும் துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் ரெயின்கோட் அணிந்து கொண்டு பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். கொட்டும் மழையிலும் துர்கா ஸ்டாலின் ரெயின்கோட் அணிந்தபடி பால் குடம் எடுத்த நிகழ்வும் கவனம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“