நடிகர் அர்ஜுன் சென்னை போரூரில் கட்டியுள்ள புதிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார். அர்ஜுன் கட்டிய புதிய கோயிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின் சென்று தரிசனம் செய்திருக்கிறார்.
தமிழ் சினிமா துறையில் ஆக்ஷன் கிங் என அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் ஒரு தீவிர ஆஞ்சநேயர் சுவாமி பக்தர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இவர் சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவில் கட்டியுள்ளார். அர்ஜுன் புதியதாக கட்டிய கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கோயில் தனது 17 வருட கனவு என்று கூறியுள்ள அர்ஜுன், கோயிலில் 180 டன் எடைகொண்ட ஒற்றைக்கல் ஆஞ்சநேயர் சுவாமி சிலை சிறப்பம்சமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் சுவாமி கும்பாபிஷேகம் விழாவையடுத்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின் இந்த கோயிலுக்கு சென்றுள்ளார். துர்கா ஸ்டாலின் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்ற புகைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
தான் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் குறித்து நடிகர் அர்ஜூன் கூறுகையில் “இந்த கோவில் என்னுடைய 17 வருட கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை.
தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் பலரின் ஆதரவும் என்னை மேலும் மேலும் இந்த நற்செயலை செய்ய தூண்டுதலாக இருந்தது.
இருப்பினும் இந்த கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்ய தூண்டியது என்பது தான் உண்மை.
ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இது தான் முதல் 180 டன் எடையுடய ஶ்ரீ ஆஞ்சநேயர் சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது.
பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலின் பிரதிஷ்டை செய்து கொடுத்தார். மேலும் ஒரு சிறப்பம்சமாக பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அயோத்திக்கு சென்றிருந்தார். அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி மந்திரம் கோயிலின் பிரதிஷ்டை செய்ய விஜயம் செய்த சுவாமிகள் தன்னுடன் அயோத்தியின் மண் எடுத்து வந்திருந்தார். அந்த மண்ணின் மீது இந்த கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இன்று தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் துணைவி துர்கா ஸ்டாலின் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி மந்திரம் கோவிலுக்கு வந்து ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் தரிசனம் பெற்றார். அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.
விரைவில் இந்த கோவில் பொது மக்களுக்காக திறக்கபடவுள்ளது. கொரோனாவால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் கடவுளின் அனுக்கிரங்களும் ஆசியும் மக்கள் அவசியம். கடவுளின் அருள் மக்களுக்கு கிடைக்க வேண்டும், அவர்களின் வாழ்வில் துன்பம் மறைந்து இன்பம் பெருக வேண்டும் என்பதே என் ஆசை” என்று கூறினார்.
நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்று வணங்கி இருக்கிறார். அவர் கோயிலில் ஒற்றைக்கல் ஆஞ்சநேயர் சிலை முன்பு இருக்கிற புகைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில், நடிகர் அர்ஜுன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.