பழனி முருகன் கோயிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியி உள்ள தண்டாயுதபானி சுவாமி கோயில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. அத்தகைய சிறப்பு மிகு பழனி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றுவருகிறது. கந்த சஷ்டி விழா நேற்று முன்தினம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் பழனி மலைக் கோயில், உற்சவருக்கும், விநாயகர், துவாரபாலகர், நவவீரர்கள், மயில், கொடிமரம் மற்றும் பழனி கோயில் யானை கஸ்தூரிக்கும் காப்பு கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தங்கள் முருகனை வழிபட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டும் என கந்த சஷ்டி விரதத்தை தொடங்கினர். வருகிற நவம்பர் 2 ஆம் தேதி கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், பழனி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று சாமி தரிசனம் செய்தார். பழனி தண்டாயுதபானி சுவாமிக்கு நடைபெற்ற சாயரட்சை பூஜையில் கலந்துகொண்ட துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் முடிந்தபின் புறப்பட்டுச் சென்றார். அவருடன் பழனி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.
இதே போன்று, ஆகஸ்ட் மாதம் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜசுவாமி கோயிலில் அத்திவரதர் வைபவத்தின்போது துர்கா ஸ்டாலின் கோயிலுக்கு விஐபி பாஸிஸ் அத்திவரதரை தரிசனம் செய்தார்.