'மூன்று இதயங்களை கொண்டிருக்கும் ஸ்டாலினை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது' என்று தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்குப் பிறகு, கருணாநிதியின் நினைவுகள் குறித்து பேசிய தி.மு.க வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், "என்னுடைய இரங்கல் கூட்டத்தில் தலைவர் உரையாற்றுவார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் என்னை உருவாக்கிவிட்டு அவர் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொள்ளும் துர்பாக்கிய நிலைமை நமக்கு ஏற்பட்டு இருக்கிறது.
கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் வைத்து பொத்தி பொத்தி வளர்த்தது போல் கலைஞர் எங்களை வளர்த்தார். நான் பொதுவாழ்வில் எப்படி வாழ வேண்டும் என்று கற்பித்து இருக்கிறார். என்னுடைய இருதய அறுவை சிகிச்சையின்போது ஆதரவாக இருந்தார். எனக்கு 2வது முறையாக உயிர் கொடுத்தவரும் அவர் தான். என் கட்டை வெந்தாலும் கலைஞர் மீதான அன்பு மாறாது. என்றும் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று சொல்லியவர் கலைஞர்.
கருணாநிதி, தேசியத் தலைவராக அறியப்படுகிறார். அவர், உலகத் தலைவர். உலக அளவில் ஐந்து கட்சிகளுக்குதான், 50 ஆண்டுகளைத் தாண்டிய பாரம்பர்யம் உள்ளது. அதில், நமது தி.மு.க-வும் ஒன்று. 60 ஆண்டுகளைத் தாண்டிய ஒரு கட்யியில், 50 ஆண்டுகளாகத் தலைவராக இருந்தது ஒரு மாபெரும் சாதனை. எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க சென்னை பல்கலைக்கழகம் முடிவு எடுத்திருந்தது. நான் அப்போது சிண்டிகேட் உறுப்பினராக இருந்தேன். சிண்டிகேட் உறுப்பினர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தாலும், டாக்டர் பட்டம் கொடுக்க முடியாது. நான், எதிர்ப்பு தெரிவிப்பேன் என்று நினைத்த பல்கலைக்கழக நிர்வாகம், சிண்டிகேட் கூட்டம் கூட்டவில்லை. பட்டம் அளிக்கும் நாளன்று அவசர அவசரமாக சிண்டிகேட் கூட்டம் கூட்டினார்கள்.
நான், இதுகுறித்து கருணாநிதியிடம் சொன்னேன். அதற்கு கருணாநிதி, 'எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்க்கக் கூடாது. அவர், உனக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளார். துணை நடிகர் அளவிலிருந்து எம்.ஜி.ஆர் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளார். அவர், இந்த டாக்டர் பட்டத்துக்கு தகுதியானவர். நீயே, டாக்டர் பட்டம் வழங்குவதற்கு முன்மொழிய வேண்டும் என்றார்'. கருணாநிதி என்னிடம் கூறியதைக் கேட்டு எம்.ஜி.ஆர் நெகிழ்ந்து போனார். கருணாநிதி நம்மை வழிநடத்த மு.க.ஸ்டாலின் என்ற ஆலம் விழுதை விட்டுச்சென்றுள்ளார்.
அண்ணாவின் இதயம், கலைஞரின் இதயம், என்றும் சுறுசுறுப்போடு இயங்கும் உன் இதயம் என மொத்தம் இதயங்களை ஸ்டாலின் கொண்டிருக்கிறார். மூன்று இதயங்கள் கொண்ட உங்களை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது.
கருணாநிதி மண்ணைவிட்டுச் சென்றாலும், மு.க.ஸ்டாலின் என்ற ஒளிக்கீற்று நம்மை வழிநடத்தும். தலைவராகப்போகிற தலைவரே உங்கள் வழியில் நடப்போம்." என்று துரைமுருகன் உருக்கமாக பேசினார்.