திருச்சி செங்குறிச்சியைச் சேர்ந்த பிரவின்குமார் என்ற கட்டிட மின் வயரிங் செய்பவர், திருச்சி, மணிகண்டம், மேக்குடி கிராமத்தில் வீடு கட்ட இருக்கும் கோவிந்தராஜ் என்பவருக்காக அவரது வீட்டுமனைக்கு தற்காலிக மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தார். இதனையடுத்து தற்காலிக மின் இணைப்பு வழங்க, ஏற்பாடு செய்ய திருச்சி, மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் அருளாணந்தம் என்பவரை கடந்த 08.07.2025 அன்று அணுகினார்.
அப்போது மின் இணைப்பு கொடுக்க வணிக ஆய்வாளர் அருளாணந்தம் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். அதை கொடுக்க விரும்பாத பிரவின்குமார் நேற்று திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று 10.07.2025 அன்று திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ் சேவியர் ராணி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின்போது வணிக ஆய்வாளர் அருளாணந்தம் லஞ்சப்பணம் ரூ.10,000ஐ பிரவின் குமாரிடமிருந்து பெற்று தமது அலுவலகத்தில் வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டார். பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
பின்னர் இது தொடர்பாக திருச்சி, மணிகண்டம் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. மின்வாரிய அதிகாரி லஞ்ச வழக்கில் கைதானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்