வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், பண்ருட்டி தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினர்.
சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த பிப்ரவரி மாதமும் சோதனை நடத்தி இருந்தனர். அப்போது அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த அ.தி.மு.க ஆட்சியில், சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக இருந்தபோது, பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிட டெண்டரில் ரூ.20 லட்சம் பண மோசடி செய்ததாகக் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் பன்னீர்செல்வம் முதல் குற்றவாளியாகவும், அப்போதைய நகராட்சி ஆணையர் பெருமாள் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு மொத்தம் ஆறு பேர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக, முன்னாள் எம்.எ.ல்ஏ சத்யா பன்னீர்செல்வம் வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த முறை 9 மணி நேரம் சோதனை நடத்தியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
க.சண்முகவடிவேல்