விஜிலன்ஸ் ரெய்டு: காமராஜ் வீட்டு முன்பு திரண்ட அ.தி.மு.க-வினர்
Anti-corruption department raids former AIADMK minister Kamaraj house and properties Tamil News: திருச்சியில் முன்னாள் அமைச்சர் காமராஜ்க்கு சொந்தமான சொகுசு விடுதி உள்பட 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
Anti-Corruption officials booked a case against Ex food minister Kamaraj for amassing wealth of about Rs 58 crore
க. சண்முகவடிவேல்
Advertisment
தமிழக முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், அ.தி.மு.க திருவாரூர் மாவட்ட செயலாளராகவும் உள்ள ஆர்.காமராஜ் எம்எல்ஏவுக்கு சொந்தமான திருச்சி பிளாசம் நட்சத்திர ஹோட்டல் மற்றும் வீடு உள்ளிட்ட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு உட்பட 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை 5 மணி அளவில் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் சென்று சோதனையை தொடங்கினர்.
இதேபோல் மன்னார்குடி முதல் தெருவில் உள்ள அதிமுக நகரச் செயலாளரும், ஆர்.காமராஜின் உறவினரான ஆர்.ஜி.குமார், வேட்டை திடலில் உள்ள காமராஜின் நண்பர் சத்தியமூர்த்தி, தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் உள்ள ஆர்.காமராஜ் சம்மந்தி டாக்டர் மோகன் வீடு, காமராஜின் உறவினரான வழக்கறிஞர் உதயகுமார் வீடு, மன்னை கிருஷ்ணமூர்த்தி வீடு, நன்னிலத்தில் உள்ள காமராஜ் வீடு, தஞ்சையில் காமராஜ் புதிதாக கட்டி வரும் மருத்துவமனை, திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜ்க்கு சொந்தமான சொகுசு ஹோட்டலான பிளாசம், கே.கே.நகரில் உள்ள அவரது நண்பர் வீடு மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 49 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.
லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வரும் தகவல் அறிந்த அதிமுகவினர் ஏராளமானோர் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு கூடி நின்றனர்.அப்போது காமராஜ் வீட்டைவிட்டு வெளியில் வந்து கட்சியினருக்கு வணக்கம் தெரிவித்தார். வெளியில் கூடியிருந்த கட்சியினர் திமுக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதனால் திருவாரூர் மாவட்ட அதிமுகவினிடையே பெரும் பரபரப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் அ.இ.அ.தி.மு.கவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத விடியா திமுக அரசு, முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மீதும், அவரது நண்பர்கள், உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.
அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என முன்னாள் முதல்வரும், தமிழக எதிர் கட்சித் தலைவரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுத்திருக்கின்றார்.
முன்னாள் அமைச்சர் காமராஜ் கடந்த 2015 முதல் 2021-ம் வரையான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல்துறை முன்னாள் அமைச்சர் காமராஜின் மகன் உள்ளிட்ட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.