New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/07/former-Minister-Kamaraj.jpg)
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில், இன்று (ஜூலை 8) லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், ரூ.41 லட்சம் பணம், தங்க நகைகள், வெள்ளிப் பொருட்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் காமராஜ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக அவர் மீதும் அவரது மகன்கள் இனியன் மற்றும் இன்பன், காமராஜின் நண்பர்கள் உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி, சந்திரசேகர் ஆகிய 6 பேர் மீதும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்தது.
இதைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள காமராஜ் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடு உட்பட 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று காலை அதிரடி சோதனை நடத்தினர். இன்று காலை (ஜூலை 8) 5 மணி அளவில் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
அதே போல, மன்னார்குடி முதல் தெருவில் உள்ள அதிமுக நகரச் செயலாளரும், காமராஜின் உறவினரான ஆர்.ஜி. குமார், வேட்டைத் திடலில் உள்ள காமராஜின் நண்பர் சத்தியமூர்த்தி தஞ்சாவூரில் உள்ள ஆர்.காமராஜ் சம்பந்தியின் வீடு, நன்னிலத்தில் உள்ள காமராஜ் வீடு, தஞ்சையில் காமராஜ் புதிதாக கட்டி வரும் மருத்துவமனை, சென்னையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 49 இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், சோதனையில் ரூ.41 லட்சம் பணம், 963 சவரன் தங்கம் ஐபோன், ஆவணங்கள், வங்கி பெட்டி சாவி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ், “லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். ஒற்றை தலைமையை தடுக்க முயற்சிக்கின்றனர். சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை ” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.