ஈரோடு மாநகராட்சி ஆணையரும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவருமான சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 21) சோதனை நடத்தினர்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர் ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார். இவர் இதற்கு முன்னர் திருப்பூர் மாநகராட்சி ஆணையராகவும், பல்லவபுரம் நகராட்சி ஆணையராகவும் பணியாற்றிவர்.
இதையும் படியுங்கள்: ஜக்கி வாசுதேவ்-ஐ விசாரிக்க வேண்டும்; ஈஷாவை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்
பல்லவபுரம் நகராட்சி ஆணையராக சிவக்குமார் பணிபுரிந்த போது அவர் மீது ஏராளமான ஊழல் முறைகேடு, லஞ்ச புகார்கள் அரசுக்கு சென்றன. இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டது. மேலும் மேல்நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் பதவி உயர்வு அடிப்படையில் சிவக்குமார் திருப்பூர் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார். இதையடுத்து ஈரோடு மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பல்லவபுரம் நகராட்சியில் ஆணையராக பணியாற்றிய காலத்தில் குவிந்த புகார்களைத் தொடர்ந்து சிவக்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் தான் இன்று ஈரோட்டில் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தியது. இது ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil