தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று காலை முதல் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 69 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து சிக்கி வரும் நிலையில் 5வது நபரகாக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழகுப் பதிவு செய்து அவருக்குக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. அந்த வரிசையில், 5வது நபராக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்த குறிவைத்துள்ள அடுத்த முன்னாள் அமைச்சர் யார் என்று அதிமுகவிலும் அரசியல் களத்திலும் கேள்விகளையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
முதலில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினர்.
இரண்டாவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைப்புத் தொகை ஆவணம், 13 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மாநகராட்சி ஆவணங்கள், நிறுவனங்களுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
மூன்றாவதாக, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் ஜோலார்பேட்டை வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கே.சி.வீரமணி வீட்டில் சுமார் 5 கிலோ தங்கம், 34 லட்சம் ரூபாய் பணம், 1 லட்சத்து 80 ஆயிரம் அந்நிய செலாவணி, 2 ஹார்டு டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து, நான்காவதாக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இப்படி மாதம் ஒரு அதிமுக முன்னாள் அமைச்சர் என லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வந்த நிலையில், நவம்பர் மாதம் எந்த சோதனையும் நடைபெறாததால் இத்துடன் இந்த சோதனை நடவடிக்கை ஓய்ந்தது என்று அதிமுகவினர் நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில், நவம்பர் மாத மழை ஓய்ந்ததும் லஞ்சஒழிப்புத்துறை தனது சோதனை நடவடிக்கையை 5வது நபராக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அதிரடியாக இறங்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர் தங்கமணி அதிமுக ஆட்சியில் பதவியில் இருந்த காலத்தில், அவருடைய வருமானத்துக்கு அதிகமாகவும் முறைகேடுகள் மூலம் சொத்து சேர்த்ததாக புகார்கள் வெளியானதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்கமணி மற்றும் அவருடைய மனைவி, மகன் மீது வழக்குப் பதிவு செய்து அதிரடி சோதனையில் இறங்கினர்.
அதிமுகவின் நாமக்கல் மாவட்ட செயலாளரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான எஸ்.பி. வேலுமணியின் பள்ளிபாளையம் வீடு, அவருடைய அவலுலகம் மற்றும் நாமக்கல், ஈரோடு, வேலூர், சேலம், கரூர், திருப்பூர், கோவை, கர்நாடகா, ஆந்திரா உள்பட 69 இடங்களில் புதன்கிழமை காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நடவடிக்கைகளில் 150க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, திமுக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்த அமைச்சர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
இதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜூலை மாதம் எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி, செப்டம்பர் மாதம் கே.சி.வீரமணி, அக்டோபர் மாதம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என மாதம் ஒரு அமைச்சர் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அடுத்தடுத்து 4 முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது. நவம்பர் மாதம் மழை காரணமாக இடைவெளிவிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிசம்பர் மாதத்தில் 5வது நபராக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிக்கிவரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை குறி வைத்துள்ள அடுத்த அமைச்சர் யார் என்ற கேள்வி அதிமுகவினர் மத்தியில் கலக்கத்த ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”