கோவையை தொடர்ந்து திருச்சியிலும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி ரெய்டில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையை போன்ற பரபரப்பு திருச்சி அதிமுகவினர் மத்தியில் இல்லை.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணி. இவர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகிக்கும்போது கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை, எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் மேற்கொண்டார். இந்த திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக அமைச்சராக இருந்த வேலுமணி ஒப்பந்தங்களை வழங்கியதாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தற்போது 3-வது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.
எஸ்.பி. வேலுமணியின் உறவினர்கள் நண்பர்கள் இடங்கள் என தமிழகம் முழுவதும் சுமார் 26 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் உறவினரான திருச்சி மேல புலிவார்டு சாலையில் உள்ள மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான கணேசா டிரேடர்ஸ் நிறுவனத்தில், அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரில் உள்ள சுதாகர் என்பவரது வீட்டிலும் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேசன் தலைமையிலான போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி., மணிகண்டன் தலைமையிலான ஒரு குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பூர்வீக இல்லத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்புடைய இல்லங்கள், வணிக நிறுவனங்களில் இன்று அதிகாலை முதல் நடைபெறும் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ரெய்டில் பெரிய அளவில்பணம் எதுவும் சிக்கவில்லை என அதிகாரிகள் தரப்பினர் தெரிவித்திருந்தாலும் இந்த ரெய்டால் திருச்சி மாநகர அதிமுகவினர் பரபரப்படைந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.