அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி தொடர்பான 26 இடங்களிலும், சி.விஜயபாஸ்கர் தொடர்பான 13 இடங்களிலும் இன்று (செப்டம்பர் 13) காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அரசு விதிகளை மீறி தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தப்பணி வழங்கி, அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தற்போது சபாநாயகராக உள்ள அப்பாவு 2019, 2020ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 10 பேர் மீது
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள வேலுமணி வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. ஏற்கனவே 2 முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், 3ஆவது முறையாக வேலுமணி இல்லத்தில் சோதனை நடத்தப்படுகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்வதாக தகவலறிந்த வேலுமணி ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் குவிந்துள்ளனர்.
இதேபோல் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வேல்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு விதிமுறைகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக குற்றஞ்சாட்டு எழுந்தது. புதிய மருத்துவ கல்லூரி தொடங்க தகுதியானது என விதிகளுக்கு முரணாக சான்றிதழ் வழங்கியதாக புகார் கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சி.விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக முக்கிய நபர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் 7 பேர் மீது ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டுள்ளது. சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் தொடர்புடைய இடங்களில் முன்பே சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது வேறு புகார்களின் அடிப்படையில் சோதனை நடத்தப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil