பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலத்தின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனைகளின் போது ரூ. 13.5 லட்சம் ரொக்கம் மற்றும் சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்க நகைகள், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, வெங்கடாசலம் வீட்டில் 10 கிலோ சந்தன மரப்பொருட்கள், சந்தனத் துண்டுகள் இருப்பதால் வனத்துறையினருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வனத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற வெங்கடாசலம் கடந்த 2019-ம் ஆண்டுமாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் அந்த பதவியை தவறாகபயன்படுத்தி, பல்வேறு நிறுவனங்கள், திட்டங்களுக்கு முறைகேடாக தடையில்லா சான்று வழங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆட்சியில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை வெங்கடாசலம் லஞ்சமாக பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil