/indian-express-tamil/media/media_files/2025/10/13/kolathur-mani-jeeva-periyar-2025-10-13-15-55-17.jpg)
சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரி ஆதரவாளர்களும் தி.வி.க தலைவர் கொளத்தூர் மணிக்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இதையடுத்து, கொளத்தூர் மணி ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி ஒரு பயிலரங்கில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த ஜீவானந்தம் இடஒதுக்கீட்டை எதிர்த்தார் என்றும் இந்தி மொழியை ஆதரித்தார் என்றும் பேசியது, பெரியாரிஸ்டுகளுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையே வரலாற்று சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு, சமூக வலைதளங்களில் கம்யூனிஸ்ட்டுகளும் இடதுசாரி ஆதரவாளர்களும் தி.வி.க தலைவர் கொளத்தூர் மணிக்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். இதையடுத்து, கொளத்தூர் மணி ஒரு விளக்கம் அளித்துள்ளார். அந்த பயிலரங்கில், கொளத்தூர் மணி ஜீவானந்தம் பற்றி அப்படி என்னதான் பேசினார் என்று பார்ப்போம்.
கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் செப்டம்பர் 28-ம் தேதி திராவிட இயக்க கொள்கைகள் குறித்த பயிலரங்கு நடைபெற்றது. இந்த பயிலரங்கில், ஈரோட்டுப் பாதையா சரியா என்ற கேள்விக்கு பதிலளித்த தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி ஜீவா பற்றி பேசியது சர்ச்சையாகி உள்ளது.
பயிலரங்கில் கொளத்தூர் மணி பேசியதாவது: “ஜீவானந்தம் எழுதிய புத்தகத்தை நானும் படித்தேன். அவர் கொள்கையில் ரொம்ப உறுதியாக இருப்பார் என்று சொல்லிக்கொள்பவர். அவர் சுயமரியாதை இயக்கத்தில் இருந்துதான் போனார். முதலில் அவர் சுயமரியாதை இயக்கத்தில் இருந்துதான் போனார் என்று கம்யூனிஸ்ட்காரர்கள் யாரும் சொல்லவே மாட்டார்கள். அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு போன உடனே இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசினார். இந்தியை வரவேற்று எழுதினார். இந்தி இருக்க வேண்டும் என்றார். நாம் எல்லாம் ஒரே இந்தியர்கள், இந்தி படிக்க வேண்டும் என்றார். அவரைப் பற்றி நாம் பதில் எழுதுவது சரியில்லை.
இப்போது இருக்கிற சீமான் அளவுக்கு அவர் அப்போது எழுதியிருப்பார். அந்த மாதிரிதான் இருப்பார், பழைய சீமான் அவர். ஆனால், என்ன ஒன்றென்றால், அவருடைய காலத்திற்குப் பிறகு, அவருடைய 2 மகளுக்கும் பெரியார்தான் திருமணம் செய்து வைத்தார். தன்னுடைய பெரியார் மாளிகையில்தான் திருமணம் செய்து வைத்தார். நம் ஜீவானந்தம் பிள்ளைகள், யாரும் ஆதரவு இல்லாமல் இருக்கிறார்கள் என்று பெரியார்தான் திருமணம் நடத்தி வைத்தார்.
அதில் ஒரு வரலாற்று செய்தி என்னவென்றால், ஜீவா மகள் திருமணத்தின்போதுதான், அண்ணா வருகிறார். அப்போது அண்ணா முதலமைச்சராகிவிட்டார். அப்போதுதான், சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்பதை தீர்மானமாகக் கொண்டுவரப்போகிறோம், அது இந்த திருமணத்துக்கு பரிசாக இருக்கட்டும் என்று அண்ணா பேசுகிறார். அந்த தீர்மானம் ஒரு மாதம் கழித்துதான் வந்தது. ஆனால், அண்ணா அப்போது சொல்கிறார்.
பெரியார் ஜீவா மகள் திருமணத்தை முதலமைச்சரைக் கூப்பிட்டு நடத்துகிறார். ஆனால், அவரைப் (பெரியாரைப்) பற்றி ஜீவா இப்படித்தான் எழுதியிருக்கிறார். பெரியார் இந்த திருமணத்தை, அவர் (ஜீவா) இருந்தபோது நடத்தியிருந்தால், பெரியார் காக்காப் பிடிக்கிறார் என்று சொல்லலாம். ஆனால், ஜீவா இறந்தபிறகுதான் நடத்தி இருக்கிறார்.
அதனால், அவர் ஆற்றிய பணிக் காலத்தில் அவர் அப்படிதான் இருந்தார்கள். அவர் (ஜீவா) நிறைய அதிகப்பிரசங்கித்தனம் எல்லாம் பண்ணுவார். அவர்களுடைய தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. அவர்களுடைய தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்கு காங்கிரஸ் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு பிரிவு தலைவராக இருந்தவர் நாவலர் சோமசுந்தர பாரதியார், அவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பெரியாருடன் வந்திருந்தாலும், அவர் காங்கிரஸ்காரராகத்தான் வந்தார்.
அவர் காங்கிரஸ்காரராக இருந்துகொண்டு இந்தியை எதிர்த்தவர். அதற்கு முன்னாலேயே அவர்களை வைத்துக்கொண்டு, காங்கிரஸ் பிரிவிரிலிருந்த தீண்டாமை ஒழிப்பு பிரிவு என்கிற காரணத்தால், தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்கு அவரைக் கூப்பிடுகிறார். அவர் மாநாட்டுக்கு பேசுவதற்கு வருகிறார்.
அவர் பேச எழுந்த உடனே, ஜீவா எழுந்து நீங்கள் காங்கிரஸ்காரர் எங்கள் மாநாட்டில் பேசக் கூடாது என்று சொல்கிறார். வல்லத்தரசு, சாத்தான்குளம் ராகவன் எல்லாம் ஒரு குழுவாக மொத்தமாக அமைப்பில் இருந்து வெளியே போனார்கள். அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு போனார்கள்.
அப்போது, சுயமரியாதை சமதர்மக் கட்சி என்று ஒரு மாநாடு நடத்தின் முதல் மாநாட்டிலேயே கட்சியைக் கலைத்துவிடுகிறோம் என்று ஒரு தீர்மானம் போட்டுவிட்டு அவர்கள் காங்கிரஸில் போய் சேர்ந்துவிட்டார்கள்.” என்று கூறியுள்ளார்.
மேலும், கொளத்தூர் மணி பேசுகையில், “இடஒதுக்கீடு சரியா, தவறா என்றுதான் முடிவு பண்ணவேண்டுமே தவிர, என் கட்சி ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்லக்கூடாது. என் கட்சி ஒத்துக்கொள்ளவில்லை, அதனால் நான் மட்டும் எப்படி ஒதுக்கொள்வது என்று சொன்னால், அது என்ன கொள்கை என்று எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி, பி.ஆர்.கே என்று அழைக்கப்படுகிற பூ.ரா.குப்புசாமி எழுதியிருக்கிறார். ‘மறைக்கப்பட்ட பகுதிகள்’ என்று எழுதியிருக்கிறார். அவர் ஆதரித்து எழுதுபவர்தான். இந்த 2-3 விஷயத்தில் மட்டும் இப்படி எழுதியிருக்கிறார். இதை தா.பாண்டியனே சொன்னாராம். ‘நீங்கள் என்ன இடஒதுக்கீட்டை எதிர்க்கிறீர்கள் என்று (ஜீவாவிடம்) கேட்டதற்கு, எனக்கு (ஜீவா) என்று தனிக் கொள்கை இல்லை, கட்சி சொல்வதுதான்’ என்று ஜீவா சொன்னார் என்று தா.பாண்டியன் சொன்னதாகத்தான் அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தைத் தா.பாண்டியன் வெளியிட்டார். அதனால், அவர் இல்லையென்று சொல்லமுடியாது. அந்த மாதிரியான பல செய்திகள் இருக்கிறது.
தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்கு தலைமை தாங்கி, சோமசுந்தர பாரதியாரை கூப்பிட்டிருக்கிறார். பெரியார் நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு சொல்கிறார். மன்னிக்க வேண்டும், நாம் இங்கே கூட்டிய மாநாட்டுக்கு அதன் கொள்கையில் உடன்பாடு உள்ள தோழர் என்பதாலும் காங்கிரஸ் கட்சியின் அந்தப் பிரிவின் தலைவர் என்பதாலும் நாம் கூப்பிட்டிருக்கிறோம். அவர் நமக்கு எதிரான கருத்து கொண்டவர் என்றால் கூப்பிடமாட்டோம், அவரும் நம்மைப் பற்றி தெரிந்துகொண்டுதான் இங்கே வந்திருக்கிறார். எனவே தோழர்கள் அமைதிகாக்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனாலும், ஒரே சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
பெரியார், எழுந்திருந்து, நான் சோமசுந்தர பாரதியாரிடம் நிபந்தனை இல்லாமல் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறுகிறார். இந்த இளைஞர்கள் என்னவென்றே தெரியாமல் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்று அங்கே மன்னிப்பு கேட்டதோடு மட்டுமில்லாமல், தனியாக குடியரசு இதழில் ஒரு அறிக்கையும் எழுதுகிறார். நிபந்தனை இல்லாமல் மன்னிப்பு கோருகிறேன் என்று சோமசுந்தர பாரதியாருக்கு எழுதுகிறார். அந்த மாதிரியெல்லாம் பண்ணிக்கொண்டிருந்தால், பெரியாருக்கு எப்படி இருந்திருக்கும்.
அப்புறம், நீதிக்கட்சி என்பது பணக்காரர்கள் கட்சி. அதில் போய் இருக்கிறீர்கள் என்று ஜீவா கிண்டல் பண்ணார். பெரியாரும் பின்னால் கிண்டல் பண்ணார். ஏழைகளின் கட்சியான காங்கிரஸ் கட்சியில் நம்மாட்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்று கிண்டலாக எழுதினார். டாடா, பிர்லா போன்ற ஏழைகள் இருக்கிற கட்சியில் சேர்ந்திருக்கிறீர்கள் என்று எழுதினார். எளிய காந்தியா பிர்லா மாளிகையில்தானே இருந்தார்.
ஜமன்லால் பஜாஜ் என்பவர்தான் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்தார். ஜமன்லால் பாஜாஜ், டாடா பிர்லா போன்ற ஏழைகள் இருந்த கட்சியில் ஜீவானந்தம் அவர்கள் போய் சேர்ந்துவிட்டார்கள் என்று எழுதுகிறார். ஆனால், ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், இரண்டும் பணக்காரர்களின் கட்சியாக இருக்கலாம், பிற்போக்கானவர்கள் இருக்கிற கட்சியாக இருக்கலாம். ஆனால், இந்த கட்சி இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்கிறது. அந்தக் கட்சி இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஒன்று போதும் எனக்கு என்று பெரியார் எழுதுகிறார்.” என்று கொளத்தூர் மணி பேசியிருக்கிறார்.
கொளத்தூர் மணியின் உரையில், ஜீவா இடஒதுக்கீட்டை எதிர்த்தார், இந்தி மொழியை வரவேற்றார், ஜீவா அந்தக் காலத்து பழைய சீமான் என்று பேசியது கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் இடதுசாரி ஆதரவாளர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் எக்ஸ் மற்றும் முகநூல் சமூக வலைதளங்களில் எதிர்வினையாற்றியுள்ளனர்.
கொளத்தூர் மணி பேச்சு குறித்து, கனகு கனகராஜ் (kanagu Kanagaraj) என்பவர் முகநூல் பக்கத்தில் எழுதுகையில், “ஆ.ராசா, கொளத்தூர் மணி போன்றோரின் ஜீவா குறித்த விமர்சனத்திற்கு பதிலளிக்கும் போது இரண்டு விதமான எதிர்வினையைக் காண முடிகிறது.
ஒன்று பாசிச அபாயமுள்ள கட்டத்தில் இருதரப்பும் முரண்படாமல் ஒன்றுக்கொன்று அனுசரித்துப் போக வேண்டுமென்பது, பிரச்சினை தொடங்கியது வேண்டுமானால் ஜீவா குறித்த பொய்களுக்கும், அவதூறுகளுக்கும் பதிலளிப்பதாகத் தொடங்கியிருக்கலாம். ஆனால், விவாதம்
இப்போதிருக்கிற சமூகத்தை முற்றிலும் மாற்றியமைப்பதில் பெரியாரியத்தின் தேவை மற்றும் மார்க்சியத்தின் தேவை குறித்தது என்பதாக பரிணாமம் அடைந்து விட்டது. அப்படியில்லை என்று நினைப்பவர்களுக்கு முழுமையான சமூக மாற்றம் குறித்த விவாதத்தில் அக்கறையில்லை ,
மாறாக தற்போதைய நிலைமைகள் குறித்த கவலைகள் மட்டுமே உண்டு என்று அர்த்தம்.
அதுவும் இல்லையெனில், பெரியாரிய மற்றும் திராவிட இயக்கங்களின் ஆதரவைப் பெற வேண்டி சமாதானம் செய்ய நினைப்பவர்களாக இருப்பார்கள். இப்படி சமாதானப்பட்டுக் கொண்டே இருப்பதுதான்,
“இப்போது எங்களிடம்தானே வந்து நிற்கிறீர்கள்.” என்று ராசா போன்றவர்கள் கேட்பதற்கு காரணமாக இருக்கிறது.
இன்னொரு வகையினர், பெரியார் ஆதரவாளர்கள் மற்றும் கொளத்தூர் மணி ஆதரவாளர்கள், இவர்களுடைய பதிவுகளில் அரைகுறை உண்மைகள் மட்டுமே உள்ளதோடு, விவாதங்களில் அருவெறுக்கத்தக்க இழிவான சொற்பிரயோகங்கள், விவாத முறைகளைக் காண முடிகிறது.
இதுபோன்ற ஆபாச, அருவெறுப்பான இலக்கியங்களான பக்தி இலக்கியங்களை எதிர்த்து ஒழுக்கமான குணநலன்களை போதிப்பதாகத்தான் பெரியாரின் பேச்சுக்கள் அமைந்திருக்கிறது.
ஆனால், பெரியாரிய ஆதரவாளர்களின் பேச்சுக்கள் அவர்கள் பிரச்சாரம் செய்த ஆபாச புராணக்கதைகளை விட கேவலமானதாக உள்ளது. இந்த விசயத்தில் பெரியாரியம் தோற்றுத்தான் போயிருக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
கொளத்தூர் மணியின் பேச்சு குறித்து எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: “வரலாற்றில் வாழ்ந்த ஆளுமைகளை எவ்வாறு மதிப்பிடுவது?
ஒரு குறிப்பிட்ட பிரச்சினை பற்றி இளமைக் காலத்திலும், மத்தியதர வயதிலும், மரணத்தருணத்திலும் ஒரே வகையான கருத்தை இவர்கள் கொண்டிருந்தனர் எனச் சொல்லவே முடியாது.
எனில், இவர்களை எவ்வாறு மதிப்பிடுவது?
மரணத் தருணத்தில் குறிப்பிட்ட பிரச்சினை குறித்து எதைச் சொன்னார்களோ அதைத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில உதாரணங்கள் சொல்கிறேன்.
மார்க்ஸ் ஐரோப்பிய மையவாதி என்பது ஒரு விவாதம். மார்க்ஸ் உலகின் பிற சமூகங்களைப் பற்றி எழுதியவை அவர் மறைந்து பல தசாப்தங்களின் பின் அண்மையில்தான் தொகுக்கப்பட்டன. மார்சல்லோ முஸ்ட்டோ, கெவின் ஆன்டர்சன் போன்றோர் அதனைத் தொகுத்தனர். இப்போது மார்க்ஸ் மீது எட்வர்ட் சைத் முன்வைத்த ஐரோப்பிய மையவாதி என்பதை மறுக்க ஆதாரங்கள் கிடைக்கின்றன.
பெனானை வாசித்துக் கொண்டிருக்கிறேன். காலனிய நீக்கம், அந்நியமாதல் நீக்கம்(dealienation) போன்றவற்றை வலியுறுத்திய பெனான், ஆப்ரிக்க ஆடசியாளர்களின் முதலாளிய மனோபாவம், பின்புரட்சிகரச் சமூகங்களின் ஒடுக்குமுறை குறித்து எழுதவில்லை என்பது ஒரு விவாதம். காரணம்? அவரது நான்கு நூல்கள் தவிர அவரது அரசியல் கட்டுரைகள் எதுவும் தொகுக்கப்படவில்லை. இப்போது தொகுக்கப்பட்ட கட்டுரைகளில் பெனான் இது குறித்து விரிவாகப் பேசுகிறார்.
மட்டுமன்று, பெனானது கடிதங்கள் இன்றுவரை முழுமையாகத் தொகுக்கப்படவில்லை.
இப்போது ஜீவா-பெரியார்-அம்பேத்கர் பிரச்னைக்கு வருவோம். அம்பேத்கர், பெரியார் எழுத்துக்கள் பெருமளவு தொகுக்கப்பட்டுவிட்டன. ஜீவாவின் மொழி பற்றிய கருத்துக்கள் என்று பார்த்தால் கூட அவரது கருத்துக்களில் முன்பின்னாக இடைவெளிகள் உள்ளன. இந்த இடைவெளியை எவ்வாறு கடப்பது?
அவரது பேச்சுக்கள், எழுத்துக்கள் முழுமையாகத் தொகுக்கப்பட வேண்டும். தமிழகப் பதிப்பகங்களில் பெரும் பணபலமும், கட்டமைப்பும் உள்ள பதிப்பகம் சிபிஐயின் சொந்த நிறுவனமான என்சிபிஹெச். அவர்களுக்கு இந்தக் கடமை உண்டு.
அறுதியாக, இதனை ஒரு குறிப்பாகச் சொல்கிறேன். பொதுவாக பெனான் எழுதுபவர் அல்ல. அவருக்குத் தட்டச்சும் தெரியாது. பெரும்பாலும் அவர் டிக்டேட் செய்து பிறரால் டைப் செய்யப்பட்டவை அவரது நூல்கள். அவரது உரைகளே பிற்பாடு எழுத்து வடிவம் பெற்றன. ஜீவா அற்புதமான பேச்சாளர் என்பதோடு இக்குறிப்பை நிறைவு செய்கிறேன்.” என்று எழுதியுள்ளார்.
அதே போல, சே கார்த்திகேயன் (Che Karthikeyan) என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தோழர் ஜீவா குறித்த கொளத்தூர் மணி அதிக பிரசங்கி அந்த கால சீமான் என்றெல்லாம் எகத்தாளமாக பேசிவிட்டு நான் அவரை இழிவுபடுத்த பேசவில்லை தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டது என சாவர்க்கர் பாணி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சுயமரியாதை இயக்கத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி பின்பு கம்யூனிஸ்ட் இயக்கம் என்று வந்ததை குறிப்பிடத்தான் அந்த கால சீமான் என்றாராம். எனில் திகவில் ஆரம்பித்து தபெதிக, திவிக, பிரபாக"ரன், வீரப்பன், திமுக எதிர்ப்பு, திமுக ஆதரவு என பல அவதாரம் பூசிய மணியை எந்த காலத்து சீமான் எனலாம் இல்லை சீமானுக்கு முன்னோடி என கூறலாமா ?
பேட்டியில் எகத்தாள சிரிப்புடன் ஜீவாவோட பொண்ணுங்களுக்கு கல்யாணம் செஞ்சு வச்சதே பெரியார்தான் என கூறும் போது டவுசர் மாட்டி விட்ட பண்ணையார் சாயல் அச்சு பிசகாமல் அப்படியே வந்து போனது. அதை கூறும்போது என்ன ஒரு ஆனந்தம் அந்த மூஞ்சியில.
உண்மையில் ஜீவாவின் பெண்கள் திருமணத்திற்கு பணம் இல்லாமலோ நாதியில்லாமலோ நிர்கதியாய் நிற்கவில்லை. அவர் பெண் ஒரு மருத்துவர் மனைவி ஒரு ஆசிரியர். ஜீவாவின் தோழர்கள் என்ற முறையில் தந்தை பெரியார், குன்றக்குடி அடிகளார், தியாகி தங்கமணி, அண்ணா முதலானோர் கலந்து கொண்ட நிகழ்வாகத்தான் அது நடந்துள்ளதாக தெரிகிறது.
என்னமோ தன்னை எதிர்த்த ஜீவா குடும்பத்திற்கு பெரியார் படியளந்தார் என்று கணக்காக கொளத்தூர் மணி போகிற போக்கில் அடித்து விடுகிறார். நாளை இதையும் மறுத்து பணம் கொடுத்து நடத்தினார் என்று நான் கூறவில்லை என டான்ஸ் ஆடினாலும் ஆடுவார்.
ஈரோட்டு பாதை சரியா என்ற நூலிற்கு பதிலளித்து எழுதப்போகிறேன் என்கிறார் தாராளமாக எழுதட்டும். போலவே பெரியார் மணியம்மை திருமணத்தை முன்னிட்டு முரசொலியில் வெளியான அவதூறுகளுக்கு எல்லாம் பதிலளித்து எழுதும் திராணி கொளத்தூர் மணிக்கு இருக்கிறதா என்ற கேள்வியையும் கேட்டு வைப்போம். ஏனென்றால் இப்போது கொள்கை வாரிசு உதயநிதி என கோஷமிடும் வேசம் பூசியிருக்கிறார் அல்லவா.
அதிக பிரசங்கி, சீமான், இன்னும் பல பொய்களை தோழர் ஜீவாவின் மேல் கட்டவிழ்த்து விடுபவர்களுக்கு நாகரிக பதில் எல்லாம் கொடுத்து கொண்டிருக்க முடியாது. விவாதம் தேவையற்றது என கூறுபவர்கள் கம்யூனிஸ்டுகளின் எதிர்வினையை கண்டிப்பவர்கள் கொளத்தூர் மணியின் பொய்களையும் கண்டிக்க வேண்டும்.
தோழர் ஜீவா தோழர் சிங்காரவேலர் போன்றோரை விமர்சிக்கும் தகுதி கொளத்தூர் மணிக்கெல்லாம் துளி கூட கிடையாது.” என்று கடுமையாகச் சாடிப் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் இப்படி பலதரப்பில் இருந்தும் எதிர்வினைகள் வந்த நிலையில், தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தி.வி.க தலைவர் கொளத்தூர் மணி அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நேற்று முழுவதும் 28.9.2025 அன்று கோவையில் நடந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் பயிலரங்கின் நிறைவில் என்னிடம் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு நான் அளித்த பதிலை மையமிட்டு பல்வேறு பதிவுகள் வெளிவந்த வண்ணமாக இருந்தன.
அது குறித்து நான் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்.
எழுப்பப்பட்ட கேள்விகளில் ஒன்று “ஈரோட்டுப் பாதை சரியா?” என்ற நூலில் தோழர் ஜீவா அவர்கள் எழுப்பிய கேள்வி குறித்து உங்கள் விளக்கம் என்ன? என்பதுதான்.
அந்த நூல் ஏற்கனவே ‘தமிழன் தொடுத்த போர்’ என்ற தலைப்பில் 1938 இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்து எழுதி இருந்த தோழர் மா. இளஞ்செழியன் அவர்களால் எழுதப்பட்ட 1947 ஆண்டு பிற்பகுதியில் வெளியான ஒரு நூலை விமர்சித்து எழுதப்பட்டதாகும்.
அவர் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து 1944 வரையான காலத்தை நான்கு கட்டங்களாக பிரித்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்ட மாற்றங்களை குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் எழுதியிருந்த “ஈரோட்டுப் பாதை” என்ற நூலுக்கு எதிராக எழுதப்பட்ட ஒன்றுதான் ஜீவா அவர்கள் 1947 டிசம்பர் முதல் 1948 பிப்ரவரி வரை ‘ஜனநாயகம்’ என்ற இதழில் எழுதிய கட்டுரைத் தொகுப்பே ஈரோட்டுப் பாதை சரியா? என்ற நூலாகும்.
அந்த நூலினை படித்தவர்களுக்குத் தெரியும். பெரியாரின் அனைத்து நடவடிக்கைகளும் ஒரு உள்நோக்கம் கொண்டே செய்யப்பட்டன என்றும், ஆங்கிலேயர் அரசின் ஆதரவு பெற – ஜமீன்தார், பெரு முதலாளிகளின் ஆதரவைப் பெற - காங்கிரசுக்கு எதிராக இயங்க - மாகாண ஆளுநரின் நட்பைப் பெற என்ற பல்வேறு சுயநல எண்ணங்களோடு தான் அனைத்து செயல்பாடுகளும் பெரியாரிடம் இருந்தது என்பதாகத்தான் அது இருக்கும்.
மேலும், யமுனா ராஜேந்திரன் குறிப்பிட்டிருப்பதைபோல "ஈரோட்டுப் பாதை நூலில் இடையறாது ஓடும் ஒரு சரடு, திராவிடர் கழகம் ,..
..... ...... ..... இடைநிலைச் சாதிகளின், நிலச்சுவாந்தார்களின், லேவாதேவிக்காரர்களின், பெரும் பணக்காரர்களின் இயக்கமாகவும் அது இருந்தது என்பது.
சுருக்கமாக தோழர் ஜீவா அவர்கள் பெரியாரோடு இயங்கிய காலத்தில் ஏற்றுக் கொண்டிருந்த இந்தி எதிர்ப்பு, வகுப்புவாரி உரிமை, கம்பராமாயணம் போன்ற புராண நூல்கள் மீதான எதிர்ப்பரப்புரைகள் ஆகிய அனைத்துக்கும் எதிராக சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வெளியேறியவுடன் செயல்பட்டார்.
எப்படி சீமான் பெரியார் இயக்கத்தோடு இயங்கிய காலத்தில் ஏற்றுக் கொண்டிருந்த கடவுள் மறுப்பு, ஜாதி எதிர்ப்பு, திராவிடர் அடையாளம், போன்ற கருத்துக்களை அமைப்பிலிருந்து விலகி தனி இயக்கம் கண்ட பின்னர் நேர் எதிராக பேசினாரோ அவ்வாறே தான் தோழர் ஜீவா அவர்களும் பேசினார்; செயல்பட்டார்.
அதைக் குறிப்பிடவே ‘சீமானின் முன்னோடி’ ‘அன்றைய சீமான்’ என்ற சொற்களை நான் அதில் பயன்படுத்திருந்தேன். அச்சொற்றொடர்தான் பலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
அதற்கு எதிர்வினையாக முகநூலில் பலரும் பதிவிட்டு இருந்ததை எனக்கு தோழர்கள் அனுப்பி வைத்தனர் (எனக்கு தனியாக முகநூல் கணக்கு இல்லாததால்).
அதில் வில்லன் சிரிப்பு, நிலப்பரபுத்துவ ஆணவம், பண்ணையார்த்தனம், கழிசடை, அற்ப மானுடப் பதர், செக்கின் மேல் காலைத்தூக்கும் ஒன்று, பிரபாகரன் கடைசி நாளில் என்னை ஒதுக்கி வைத்தார், பெரியார் சிலைகளுக்கு முன்னர் திருமணங்கள் நடத்தி வைத்து பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தது போன்ற சொற்களோடு விமர்சனங்கள் வந்து கொண்டே இருந்தன.
ஒரு பயிலரங்கில் தன்னுடைய அமைப்பின் தோழர்கள் தங்கள் இயக்கத் தலைவர் குறித்து எழுப்பப்பட்ட விமர்சனம் குறித்து அறிந்து கொள்வதற்கு வினா எழுப்புவதும், அதற்கு விளக்கம் கொடுப்பதும் தவறான ஒன்றாகப் பார்க்கப்படுவது, அதுவும் பொதுவுடமை கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களால் என்பதே அதிர்ச்சியான ஒன்றுதான்.
இந்திய சுதந்திரம் குறித்து ‘விடுதலை’யும் ‘ஜனசக்தி’யும் 1947 ஜூலையிலிருந்து 1949 வரை விவாதித்திருக்கின்றன. அதுபோலவே திராவிட நாடு, சுயநிர்ணய உரிமை, வடநாட்டு சுரண்டல், பார்ப்பனியம் ஆகியவை குறித்தும் 1952 ஆகஸ்ட் முதல் 1953 பிப்ரவரி வரை தொடர் விவாதம் நடந்திருக்கிறது.
அவ்வகை விவாதம் நடந்தால் அது பல செய்திகளை இருதரப்பாரும் புரிந்து கொள்ளவும், சரியானவற்றை ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும் என்பதே என் கருத்தாகும். தோழர் மு.வீரபாண்டியன் அவர்கள் குறிப்பிட்டிருந்ததைப் போல இது ஒரு வளர் முரணாக அமைந்து புதிய கருத்துநிலைக்குக் கூட இட்டுச் செல்லும்.
வரலாற்றை மீண்டும் நினைவு கூறுவதோ, சுட்டிக் காட்டுவதோ ஒருவரை இழிவாக்கும் நோக்கம் கொண்டது மட்டுமே என்ற எண்ணத்தில் இருந்து நாம் விலகி நின்று தொடர்ந்து விவாதிப்போம். தோழர் ஜீவா அவர்களின் "ஈரோட்டுப் பாதை சரியா?" என்ற நூலில் வைக்கப்பட்டுள்ள விமரிசனங்கள் குறித்து என்னுடைய கருத்துக்களை எங்கள் இதழான ‘புரட்சிப் பெரியார் முழக்கத்தில்’ நான் முன்வைக்க இருக்கிறேன்
அதுவரை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் எதிர்வினை ஆற்றாமல் இருக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பொதுவுடமையாளர்களில் சிலர் நமக்கு எதிராகக் கூட இருக்கலாம்; ஆனால் பொதுவுடமை கொள்கை நமக்கு எதிரானது அல்ல என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.” என்று கொளத்தூர் மணி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.