பஞ்சாபில் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியின்போது, தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், மாணவிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றிருந்தனர்.
மதர் தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டியின்போது எதிர் அணியினர் மதர் தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்ததாகவும் இதுகுறித்து மதர் தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டனர்.அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு நடுவரும் வீராங்கனைகளை தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும், இதுகுறித்து புகாரளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார். இதனால், இரு அணிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பஞ்சாபில் தமிழ்நாடு வீராங்கணைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பஞ்சாபில் கபடி போட்டியில் கலந்துகொண்ட தமிழ்நாடு மாணவிகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது என்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்துணை செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “2024 - 25-ம் ஆண்டுக்கான பல்கலைக்கழகங்களுக்கு மத்தியிலான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் உள்ள பதிண்டா மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்களில் இருந்து 36 வீராங்கனைகள் போயிருக்கிறார்கள். அவர்களுடன் 3 அணி மேலாளர்கள், 3 அணி பயிற்சியாளர்கள் போயிருக்கிறார்கள். இன்று நடைபெற்ற போட்டியில், அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும் தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கபடி போட்டியில் தமிழ்நாடு வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்தது என்று இன்று காலை புகார் வந்தது. உடனடியாக நாங்கள் தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கிறோம். இந்த புகாரின் அடிப்படையில் பயிற்றுனர் பாண்டியராஜனை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். மேலும், இவ்விவகாரம் குறித்து தெரிய வந்ததும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் அங்குள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு அங்கு நம்முடைய மாணவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.
போட்டி நடக்கும் போது பாயிண்ட்ஸ் தொடர்பாக ஒரு சின்ன மனக்கசப்பு ஏற்பட்டு இரு அணிகளுக்கு இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைப் பற்றி சமூக ஊடங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வீடியோ வந்திருக்கிறது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உடனடியாக இதை சரி செய்திருக்கிறோம். மேலும் இன்று நம்முடைய வீராங்கனைகள் அனைவரையும் பதிண்டாவில் இருந்து டெல்லி அழைத்துச் செல்வதற்கு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். அதேபோல கைது செய்யப்பட்ட நம்முடைய பயிற்றுநர் பாண்டியராஜனையும் காவல்துறையினர் விடுவித்துவிட்டார்கள்.
இன்று இரவே அவர்கள் டெல்லிக்கு சென்று, தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, தங்குகிற வசதிகள் எல்லாம் முதலமைச்சரின் உத்தரவின் பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது அவருடன் சென்ற உடற்கல்வி இயக்குனர் கலையரசியுடன் தொலைபேசியில் நான் பேசி விட்டேன். அங்கே எந்தவிதமான பதட்டமான சூழ்நிலையும் இல்லை. அவர்கள் எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆகவே, யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.” என்று கூறினார்.
‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் யாராவது டெல்லிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இல்லை, நம்முடைய ஏ.சி.எஸ் அங்கே இருக்கக்கூடிய டி.ஜி.பி-யுடன் பேசி ஆகிவிட்டது, எஸ்.டி.ஐ.பி செகரெட்டரி மெய்யநாதன் ரெட்டி அங்கே இருக்கக்கூடிய கலெக்டர் உடனும் பேசிவிட்டார். அங்கே பாயிண்ட் சிஸ்டத்தில் ஒரு சின்ன குளறுபடி ஆகி மாணவர்களுக்கு இடையே ஒரு சின்ன தள்ளுமுள்ளு ஆகியிருக்கிறது. யாருக்கும் பெரிய அடி எல்லாம் கிடையாது, சின்ன சின்ன சிராய்ப்புகள் தான். மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போகவில்லை. முதலுதவி ட்ரீட்மெண்ட்டில் சரி செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து மாணவிகளும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.” என்று கூறினார்.
‘விளையாட வெளி மாநிலங்களுக்கு செல்லும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க உள்ளீர்கள்’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உடற்கல்வி இயக்குநர்கள், பயிற்சியாளர்கள் எல்லோரையும் உடன் அனுப்பியிருக்கிறோம். தொடர்ந்து எல்லா மாநிலங்களுக்கும் சென்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இது போல ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும் போது கண்டிப்பாக இன்னும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்” என்று கூறினார்.