சென்னையில் நேற்று முதல் மழை தொடங்கியது. இரவில் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் சென்னைக்கு அக்.17 வரை மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்றும், நாளையும் சென்னைக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இந்நிலையில், நேற்று நள்ளிரவு சென்னையில் மழை பெய்த பல்வேறு இடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், ராயப்பேட்டை ஜானி ஜான் கான் சாலை, ஜி.பி.சாலை உள்ளிட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாரர்களிடம் பேசிய அவர், "இரவு 1 மணி வரை மழை பெய்தது. பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தேன்.
ஏற்கனவே பல இடங்களில் நீர் வடிந்துள்ளது. மழைக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை பகுதியில் ஆய்வு மேற்கொண்டேன். அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தேன். இன்று மதியம் மீண்டும் அங்கு ஆய்வு செய்ய உள்ளேன். நீர்வளம், பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன். கடந்த ஆண்டு ஏற்பட்ட பாதிப்புகள் இந்தாண்டு நடைபெறாத வகையில் தீர்வு காணப்படும்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“