நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியரை விமர்சித்து பேசியது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உதயநிதி ஒரே வாக்கியத்தில் பதிலளித்து புறப்பட்டுச் சென்றார்.
குடியரசு தினவிழா பேரணியில் பங்கேற்ற என்.சி.சி மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு என்.சி.சி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டிலிருந்து 120-க்கும் மேற்பட்ட என்.சி.சி மாணவர்கள் டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில், பல்வேறு நிகழ்ச்சிகளில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளனர். அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. என்.சி.சி மாணவர்கள் டெல்லி செல்லும்போது, 3 நாட்கள் ரயிலில் பயணம் செய்து சோர்வடைகிறார்கள். அதனால், விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று என்.சி.சி மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு அவர்களை விமானத்தில் பயணிக்க வைப்பதற்காக 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து டெல்லி அனுப்பி வைத்தோம். அதற்கு அவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்கள்.
டெல்லியில் அவர்கள் பல்வேறு பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
அப்போத், சென்னை சைதாப்பேட்டையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, “பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்” என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பெரியார் மண் அல்ல, பெரியாரே ஒரு மண்ணுதான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியரை விமர்சித்து பேசியது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “நான் அவருக்கு பதில் சொல்வதே கிடையாது” என்று ஒரே வாக்கியத்தில் பதில் அளித்து புறப்பட்டுச் சென்றார்.