இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) 30 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 30 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை திட்டம் 3 மாதங்களில் விரிவுபடுத்தப்படும்' என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் இன்னும் 3 மாதங்களில் விரிவுபடுத்தப்பட்டு கூடுதலாக மகளிருக்கு உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறை சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் 30 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிடுகையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாட்டில் 30 இணையர்களின் திருமணத்தை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இன்று காலை நடத்தி வைத்தோம்.
காதலர் தினத்தில் இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கின்ற மணமக்கள் உற்ற நண்பர்களாக - ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒற்றுமையோடும் - மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்று உரையாற்றினோம்.
தமிழ்நாடும் - திராவிட மாடலும் போல மணமக்கள் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி, கழக அரசு சார்பில் சீர் வரிசை பொருட்களை வழங்கி மகிழ்ந்தோம்!” என்று தெரிவித்துள்ளார்.