தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜுன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (ஜுன் 28) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, இ சேவை மையங்களை இன்னும் பரவலாக்கப்பட வேண்டும். அதற்கான கட்டமைப்பை சிறப்பிக்க வேண்டும். எல்லா கிராமங்களிலும் வர வேண்டும் என்று எம்.எல்.ஏக்கள் ஐயப்பன், எஸ்.எஸ் பாலாஜி, ஜி.கே மணி, சதாசிவம் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய அத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், ஆயிரமாக இருந்த இ சேவை மையங்களை , இன்றைக்கு 20000க்கு மேல் அதிகரித்துள்ளோம்.
இதை 35,000 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் ஒவ்வொரு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இ சேவை மையங்களை அமைய வேண்டும் என்று நினைக்கிறோம். இதேபோல் கிராமப்புறங்களில் 3 கிமீ தூரத்திற்குள் இ சேவை மையங்கள் இருக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். இதன் அடிப்படையில் யாரெல்லாம் விண்ணப்பிக்கிறார்களோ அவர்களின் தகுதி கண்டறிந்து கடன் உதவி அளிக்க அரசு விரும்புகிறது" என்றார்.
உங்கள் ஊரில் இ சேவை மையம் தொடங்க அரசின் https://tnesevai.tn.gov.in (அல்லது) https://tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அரசு அறிவிக்கும் தேதியில் விண்ணப்பிக்க வேண்டும். கிராமப் புறங்களில் இ-சேவை மையம் தொடங்குவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3000 மற்றும் நகர்புறத்திற்கான கட்டணம் ரூ.6000 என ஆன்லைன் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“