தமிழகத்தில் காலையிலேயே மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கைகள் வருவதாகவும், 90 மி.லி அளவில் டெட்ரா பாக்கெட்டில் மது விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், பா.ம.க தலைவர் ராமதாஸ் இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் மது குடிப்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 90 மி.லி மதுப்புட்டி அறிமுகம் செய்யப்படும் என்றும், காலையில் கடுமையான பணிக்கு செல்பவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படும் மதுக்கடைகளை முன்கூட்டியே திறப்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "180 மி.லியை ஒருவர் வாங்கி முழுமையாக பயன்படுத்திவிட முடியாது. எனவே, அவர் அதில் பாதியளவை வாங்க வேறொருவருக்காக காத்திருக்க வேண்டியது உள்ளது."
மது விற்பனைத்துறை அமைச்சரா?
எனவே, 90 மி.லிக்கு ஒரு பாக்கெட் போட்டுவிட்டால், இந்தப் பிரச்சினை தீரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். தற்போது பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. ஆனால், காலையில் 7 மணியிலிருந்து 9 மணி வரை, கட்டிட வேலைகள் உள்ளிட்ட கடினமான பணிகளுக்குச் செல்லக்கூடியவர்கள் ஒரு சில சிரமங்களுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு என்ன ஏற்பாடு? என்பது குறித்து அரசு ஆழமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அமைச்சர் முத்துசாமியின் பேச்சைக் கேட்டால், அவர் மதுவிலக்குத் துறை அமைச்சரா, மது விற்பனைத்துறை அமைச்சரா? என்ற ஐயம் எழுகிறது?
180 மி.லி மதுவை பகிர்ந்து கொள்ள ஆள்கிடைக்காமல் காத்திருக்கும் குடிமகன்களைப் பற்றி கவலைப்படுவதா அமைச்சரின் பணி? காலையில் வேலைக்கு செல்பவர்கள் இரவே மது வாங்கி வைத்து பத்திரப்படுத்த முடியாது என்று சான்றிதழ் வழங்குவதா அமைச்சரின் பணி? மதுவிலக்குத்துறை அமைச்சராக முத்துசாமி அவர்கள் நியமிக்கப்பட்ட போது, மதுவைக் கட்டுப்படுத்துவதில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால், அவரது அண்மைக்கால செயல்பாடுகள் அனைத்து நம்பிக்கைகளையும் சிதைத்து விட்டன. 90 மிலி மது விற்பனை செய்யப்பட்டால், அதன் விலை மிகவும் குறைவாக இருக்கும்.
குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்கும்
அதனால், பணம் இல்லாதவர்கள் கூட, குறைந்த தொகையை எளிதாகத் திரட்டி மது வாங்கிக் குடிப்பார்கள். காகிதக் குடுவைகளினால் ஆன மது வகைகள் சிறுவர்களை கவர்ந்திழுக்கும் ஆபத்தும் உள்ளது. அதேபோல், காலை நேரத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால், அது கடுமையான வேலை செய்பவர்களுக்கு உதவாது. மாறாக அவர்கள் காலையிலேயே மது அருந்தி விட்டு, வேலைக்கு செல்லாமல் முடங்கி விடுவார்கள். அதனால் அவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்கும். தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். இந்த ஆபத்துகளையெல்லாம் உணராமல் 90 மி.லி மது, காலையில் மது வணிகம் ஆகியவற்றுக்கு ஆதரவாக அமைச்சர் பேசுவது அழகல்ல.
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பம். அதற்கு மாறான செயல்களில் தமிழக அரசு ஈடுபடக் கூடாது. 90 மி.லி மது அறிமுகம் செய்யப்பட்டாலும், மதுக்கடைகள் முன்கூட்டியே திறக்கப்பட்டாலும் அவற்றை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான போராட்டங்களை நடத்தும். எனவே, அத்தகைய திட்டங்களை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி, அடுத்த இரு ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.