நாளை முதல் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மின்சார வினியோகம் பாதிக்கும் அபாயம்!

தமிழகம் முழுவதும், மின்சார வினியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், திட்டமிட்டப்படி மின் ஊழியர்கள் நாளை (16.2.18) முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தமிழ்நாடு மின் வாரியத்தில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஊதிய உயர்வு மற்றும் வேலைப்பளு ஒப்பந்தம் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், கடந்த இரண்டு வருடமாக இவை நிலுவையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தொழிற் சங்க நிர்வாகிகளிடலும், உயர் அதிகாரிகளிடம் ஊழியர்கள் பல முறை கோரிக்கை வைத்தனர். சுமார் 88,000 நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்திருந்தனர்.

இதுத் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், நிலுவை தொகை இல்லாமல். 2.57 மடங்கு ஊதிய உயர்வு வழங்க மின்வாரியம் முடிவு செய்தது. ஆனால், தமிழக அரசின் நிதித்துறை 2.40 மடங்கு ஊதிய உயர்வு மட்டுமே போதுமானது என்று மின்வாரியத்திடம் தெரிவித்தது. இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த மின் ஊழியர்கள் பிப்ரவரி 16 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி   சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில்  மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் இடையே அதிகாரிகள் திடீரென வெளியேறியதாக தகவல் பரவியது. பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் பாதியிலேயே நிறைவடைந்தது.  அதன் பின்பு, மூன்றாவது கட்டமாக, இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக, ஊதிய உயர்வு வழங்காததால், கடும் கோபம் அடைந்துள்ள மின் வாரிய ஊழியர்கள் நாளை (16.2.18) முதல்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும், மின்சார வினியோகம்  பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 

×Close
×Close