கஜ களப்பணியில் மின்சார ஊழியர்கள்... அர்பணிப்புகளுக்கு குவியும் பாராட்டுகள்

இவர்களின் பணியும் அர்பணிப்பும் தான் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மக்கள் நிம்மதியாக இரவு உறங்குகிறார்கள்

கஜ நிவாரணப் பணிகளில் மின்சார ஊழியர்கள் : கஜ புயலின் தாக்கம் இன்னும் ஒரு மாதத்திற்கும் மேலாகவே இருக்கும் என்று சொன்னாலும் கூட மிகையாகது. எங்கும் சீரழிவின் தாக்கம். குடிசைகள், வீடுகள், மரங்கள், வயல்வெளிகள் என டெல்டா பகுதியினை புரட்டிப் போட்டுவிட்டு சென்றுவிட்டது கஜ புயல். சாலையில் விழுந்து கிடக்கும் பெரிய பெரிய மரங்களை மக்களே அகற்றி சுத்தம் செய்து வருகிறார்கள். சில இடங்களில் பெரும் ப்ரயத்தனம் கொண்டு சீரமைப்புப் பணிகளை ஆட்சியர்கள், அலுவலர்கள், மற்றும் அமைச்சர்கள்  செய்து வருகின்றார்கள்.

கஜ நிவாரணப் பணிகளில் மின்சார ஊழியர்கள்

ஆனால் பாதிக்கப்பட்ட அனைத்து இடத்திற்கும் நேரில் சென்று தங்களின் முழு வேகத்தினையும் உபயோகித்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருபவர்கள் மின்வாரியத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் தான். எங்கே புயல் வந்தாலும் சரி, மழை வந்தாலும் சரி, இவர்களுக்கு மட்டும் ஓய்வும் கிடையாது. விடுமுறையும் கிடையாது. டெல்டா பகுதிகளில் ஆயிரக்கணக்கான மின்மாற்றிகளும், மின்கம்பங்களும் புயற்காற்றிற்கு சரிந்து விழுந்து கிடக்கிறது.

டெல்டா பகுதிகளில் இருக்கும் பல்வேறு கிராமப் பகுதிகள் தங்களின் தண்ணீர் தேவைக்கு முழுக்க முழுக்க மின் மோட்டார்களையும், பம்புகளையும் நம்பி இருக்கிறது. குடிக்க தண்ணீர் வேண்டும் என்றாலும் நிலத்தடி நீர் தான். மின்சாரம் இல்லாமல் நீர் எடுப்பது கடினம். இது போன்ற இக்கட்டான சூழலில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் களப்பணிகளில் சேவை செய்து வருகிறார்கள்.

மேலும் படிக்க : தானே புயலை விட 10 மடங்கு சேதத்தினை உருவாக்கிய கஜ புயல்

கஜ நிவாரணப் பணிகளில் மின்சார ஊழியர்கள் – தொடரும் பாராட்டுகள்

தமிழ் நாடு மாநில பேரிடர் மீட்புக் குழுவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், டெல்டா பகுதியில் பழுதடைந்திருக்கும் மின்கம்பங்கள் மற்றும் முன்மாற்றிகளை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்களின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இவர்களின் களப்பணியும் அர்பணிப்புகளும் மக்கள் மத்தியில் பெரும் மரியாதையையும் நெகிழ்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.

வர்தா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் மிகவும் துரிதமாக வேலை செய்து, பல்வேறு மக்களின் பாராட்டுகளை பெற்றார்கள் மின்சார வாரிய ஊழியர்கள், பொதுப்பணித் துறை ஊழியர்கள், மற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் பணியும் அர்பணிப்பும் தான் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் மக்கள் நிம்மதியாக இரவு உறங்க இயலுகிறது.

பாதிப்பிற்குள்ளான மின் இணைப்புகள் பற்றி ஒரு பார்வை

கஜ புயலால் 1,03,508 மின்கம்பங்கள் பழுதடைந்து கீழே விழுந்துள்ளன. அதில் 16 ஆயிரம் மின் கம்பங்கள் தற்போது வரை சரி செய்யப்பட்டுள்ளது.

886 மின்மாற்றிகள் சேதம் அடைந்துள்ளன. அதில் 173 மின்மாற்றிகள் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. 181 துணை மின் இணைப்பு நிலையங்கள் சேதாரமடைந்துள்ளன. அதில் 146 நிலையங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

53 லட்சத்து 21 ஆயிரத்து 506 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. அதில் 40 லட்சத்து 4 ஆயிரத்து 452 மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த மீட்புப் பணியில் மட்டும் சுமார் 22,163 பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close