மக்களவைத் தேர்தலில் வி.சி.க-வுக்கு பானை சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்த நிலையில், பானை சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி வி.சி.க டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில், திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 6 தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்ட வி.சி.க 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தல் 2024-ல் தி.மு.க கூட்டணியில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க, தங்கள் வேட்பாளர்களுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தது. ஆனால், வி.சி.க-வுக்கு பானைச் சின்னம் ஒதுக்கப்படவில்லை.
இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இந்த மக்களவைத் தேர்தலில் பானைச் சின்னம் ஒதுக்ககுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வி.சி.க மனுத் தாக்கல் செய்திருந்தது.
வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான இன்று (27.03.2024) வி.சி.க பானை சின்னம் கோரிய மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வி.சி.க-வின் கோரிக்கையை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க இயலாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக புதன்கிழமை அறிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவிகிதம் குறைவாகப் பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டி வி.சி.க-வுக்கு பானை சின்னம் மறுக்கப்பட்டுள்ளது.
வி.சி.க-வுக்கு பானை சின்னக் ஒதுக்க உத்தரவிடக் கோரி வி.சி.க டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக வி.சி.க தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“