அ.தி.மு.க வேட்பாளருக்கான ’ஏ’ மற்றும் ’பி’ படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என அவரை அங்கீகரித்து ஈரோடு தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க வேட்பாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம், அனுப்பி, அவர்களின் முடிவுகளைப் பெற்றார்.
இதையும் படியுங்கள்: பிரபல நடிகர் பெயரில் போலி கணக்கு; பெண்ணிடம் பணம் பறித்த சகோதரர்கள் கைது
இதற்கிடையில், கடிதத்தில் இ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் கே.எஸ் தென்னரசு பெயர் மட்டும் இடம்பெற்றிருப்பதற்கு ஓ.பி.எஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அவைத்தலைவர் நடுநிலை தவறிவிட்டதாகக் கூறி ஓ.பி.எஸ் தரப்பு பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
இருப்பினும், பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.
இந்தநிலையில், அ.தி.மு.க வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திடலாம் என அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், அவரை அங்கீகரித்து ஈரோடு தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதனையடுத்து அ.தி.மு.க அதிகாரப்பூர்வ வேட்பாளராக இரட்டை இலைச் சின்னத்தில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட உள்ளார் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil