இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இந்திய இவாஞ்சலிகல் திருச்சபை (ECI) பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இந்திய இவாஞ்சலிகல் திருச்சபை (ECI) பேராயருமான எஸ்றா சற்குணம், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இ.சி.ஐ திருச்சபை பேராயர் எஸ்றா சற்குணம் இன்று உடல்நலக் குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22) காலமானார். அவருக்கு வயது 86.
பேராயர் எஸ்றா சற்குணத்தின் உடல் சென்னை கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கானது திங்கள்கிழமை (செப்டம்பர் 23) நடைபெறும் தகவல் வெளியாகி உள்ளது.
பேராயர் எஸ்றா சற்குணம் தனது 86 வது பிறந்தநாளை, கடந்த ஜூலை 19-ம் தேதி கொண்டாடினார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். பேராயர் எஸ்றா சற்குணம், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், வி.சி.க தலைவர் திருமாவளவன், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ என பல அரசியல் தலைவர்களுக்கு நெருக்கமானவராக இருந்தார்.
ஈசிஐ திருச்சபையின் பேராயர், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் திரு.எஸ்றா சற்குணம் அவர்களின் மறைவையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் இரங்கல் செய்தி. pic.twitter.com/SOqnCUaoe8
— DMK (@arivalayam) September 22, 2024
பேராயர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, “இ.சி.ஐ திருச்சபையின் பேராயரும் இணநதிய சமூகநீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திராவிட இயக்கக் கருத்தியலுடன் பின்னிப் பிணைந்த பேராயர் எஸ்றா சற்குணம் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியுடன் நெருக்கமான நட்பும் அன்பும் கொண்டிருந்தார். கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் தலைவர் கலைஞரோடும் என்னோடும் பங்கேற்றார். அவரது பிறந்தநாள் அன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்று அவருடன் கருத்துகளைப் பறிமாறிக்கொண்ட தருணங்கள் இந்நேரத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
பேராயர் எஸ்றா சற்குணம் மாறாத அன்போடு என்னுடனும் பழகியவர், என்னுடைய பிறந்தநாளில் மட்டுமல்லாது மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும்போது என்னை வாழ்த்தத் தவறாதவர்.
பேராயர் எஸ்றா சற்குணம் கிறித்துவ மக்களின் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் அவர்களின் நலன் பேணும் தளகர்த்தராகவும் செயல்பட்டு வந்ததோடு, அனைத்துச் சமூக மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர்.
சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்படவும் அவர்களது உரிமை கொண்டாடப்படவும் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்த பேராயர் எஸ்றா சற்குணத்தின் மறைவு கிறித்துவப் பெருமக்களுக்கு மட்டுமின்றி சமூகநீதியின் பால அக்கறை கொண்ட அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் இ.சி.ஐ திருச்சபை நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கும் இந்திய சமூகநீதி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.