போக்குவரத்து துறையில் பொறியாளர், நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்கள் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை லஞ்சம் பெற்று விற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் செந்தில் பாலாஜிக்கு லஞ்சமாக ரூ.67.2 கோடி கிடைத்துள்ளது என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த பணமோசடி வழக்கில் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் மாஷி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
விசாரணையின் போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், போக்குவரத்து துறையில் பொறியாளர், நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்கள் ரூ. 1.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை லஞ்சம் பெற்று விற்கப்பட்டுள்ளது. இதன்மூலம் செந்தில் பாலாஜிக்கு லஞ்சமாக ரூ.67.2 கோடி கிடைத்துள்ளது. பணமோசடி புகாருக்கான ஆதாரமாக கூறப்படும் கோப்பில் இவை தெரிய வந்துள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், மத்திய குற்றப்பிரிவு கைப்பற்றிய பென் டிரைவில் தெளிவாக உள்ளது. தமிழ்நாடு தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கையிலோ, நீதிமன்றத்தில் உள்ள ஆதாரத்திலோ அல்லது அமலாக்கத்துறை அறிக்கையிலோ, ஆதாரத்திலோ எந்த முரண்பாடும் இல்லை. குறிப்பாக பண மோசடி விவகாரத்தில் செந்தில்பாலாஜிக்கும் சண்முகம், கார்த்திக் ஆகியோருக்கு இடையிலான நெருங்கிய தொடர்புக்கான வங்கி ஆவண ஆதாரங்கள் உள்ளன என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், செந்தில்பாலாஜி வீட்டில் கைப்பற்றிய ஹார்டு டிஸ்கில் கார்த்தி வங்கிக் கணக்கு தொடங்க விண்ணப்பம் அளித்தது தெரியவந்தது. இது மத்திய குற்றப்பிரிவு கைப்பற்றியுள்ள பென் டிரைவில் தெளிவாக உள்ளது. அதனை ஏற்கும் வகையில் செந்தில் பாலாஜி முகவர் கையெப்பமிட்டுள்ளார் என்றும் அமலாக்கத் துறை தரப்பில் வாதிடப்பட்டது.
தொடந்து, செந்தில்பாலாஜி குற்றம் புரிந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இதன் மூலம் அவருக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த முறைகேட்டிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர் கூறுகிறார். எவ்வளவு காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. எப்போது உருவாகின்றன என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து போக்குவரத்து துறையின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் செய்யப்பட்ட ஆதாரம் உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது
அப்போது நீதிபதிகள், வேலைவாங்கித் தருவது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்துள்ள வழக்கில், இன்னும் விசாரணை தொடங்கி தண்டனை கிடைக்கவில்லை. அதற்குள் அமலாக்கத் துறை வழக்கில் செந்தில் பாலாஜியை தண்டிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதங்களை வைத்தார். வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கினை வரும் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“