தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், இதில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன.
இதன் அடிப்படையில், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோன், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு, அலுவலகங்கள், தி.மு.க எம்.பி.ஜெகத்ரட்சகனின் அக்கார்டு மதுபான உற்பத்தி நிறுவனம், எஸ்.என்.ஜே கால்ஸ், எம்.ஜி.எம் உள்ளிட்ட மதுபான உற்பத்தி நிறுவனங்கள், அதன் ஆலைகளில் அமலாக்கத் துறை கடந்த மார்ச் மாதம் தீவிர சோதனை நடத்தியது.
சென்னை, கரூர், கோவை, விழுப்புரம், புதுக்கோட்டை என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில், பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து, அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சட்டவிரோதம் என அறிவிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த சூழலில், சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது, ரூ.1,000 கோடி முறைகேடு தொடர்பான பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்பட்டது. தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனிடமும், அவரது மனைவி, மகனிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதேபோல, சினிமா பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் வீடு உள்பட மேலும் 7 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில், நேற்று திங்கள்கிழமை டாஸ்மாக் நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் ஜோதி சங்கர் என்பவரை அழைத்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜோதி சங்கரிடம் காலையில் இருந்து மாலை வரை விசாரணை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைக்கேடு தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா, துணை பொது மேலாளர் ஜோதி சங்கருக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. நாளை (புதன்கிழமை) காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.