/tamil-ie/media/media_files/uploads/2021/12/ED.jpg)
தமிழ்நாட்டில் நேற்று(செப்.12) பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சோதனையில் ஈடுபட்டனர். மணல் குவாரிகள், தொழிலதிபர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
இந்நிலையில், தமிழக நீர்வளத் துறையில் பொறியாளராக உள்ள அதிகாரிகள் 2 பேர் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. நீர்வளத் துறையுடன் தொடர்புடைய ஐந்து இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
நீர்வளத் துறையில் பணியாற்றும் பொறியாளர் பொதிபனி திலகம் என்பவரது வீடு மற்றும் எழிலகத்தில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. மேலும், ஆலந்தூரில் வசிக்கும் முத்தையா என்ற மற்றொரு பொறியாளர் வீடு, அண்ணாநகரில் உள்ள பட்டயக் கணக்காளர் ஒருவருடைய வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து தேனாம்பேட்டையில் வகிக்கும் ராமச்சந்திரன் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. கனிம வளத்துறை மற்றும் நீர்வளத் துறைகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் பதியப்பட்ட நிலையில் அதன் விசாரணையின் ஒரு பகுதியாக சோதனைகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.