மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்ததைவிட அதிக அளவில் மணல் அள்ளப்பட்டு, சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும், மணல் குவாரிகளில் கிடைத்த வருமானம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றங்கள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 8 மணல் குவாரிகள் உட்பட 34 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 செப்டம்பர் 12-ம் தேதி சோதனை நடத்தினர்.
குறிப்பாக, இதில் தரகர்களாக செயல்பட்டு வந்த தொழிலதிபர்கள், நீர்வளத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பணம், அசையும் சொத்துகள், அசையா சொத்துகளை முடக்கி, பல்வேறு முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
சுமார் ரூ.4,000 கோடிக்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சில அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதன்படி, தமிழக நீர்வளத் துறை முதன்மை பொறியாளர் முத்தையா பல்வேறு ஆவணங்களுடன் ஏற்கெனவே ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், அமலாக்கத் துறை சம்மனை எதிர்த்து 5 மாவட்ட ஆட்சியர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறையின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, அமலாக்கத் துறை விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்களும் ஏப்ரல் 25-ம் தேதி(நேற்று) ஆஜராக உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எம்.பிரதீப்குமார் (திருச்சி), தீபக் ஜேக்கப் (தஞ்சாவூர்), எம்.தங்கவேலு (கரூர்), ஜெ.ஆனிமேரி ஸ்வர்ணா (அரியலூர்), வி.ஆர்.சுப்புலட்சுமி (வேலூர்)ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் மணல் குவாரி தொடர்பான ஆவணங்களுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜராகினர்.
இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி அருகில் உள்ள கிளை அலுவலகத்தில் இருந்ததால், 5 பேரும் அங்கு சென்றனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்ட விவகாரத்தில் ஆட்சியர் என்ற முறையில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், டெண்டர் அடிப்படையில்தான் மணல் அள்ளப்பட்டதா, அவை முறையாக கண்காணிக்கப்பட்டதா என்பது உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு ஆட்சியர்கள் அளித்த பதில், வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. 10 மணி நேரத்துக்கு மேல் நடந்த விசாரணை இரவு வரை நீடித்தது.
குவாரிகளில் சோதனையின்போது கைப்பற்றிய ஆவணங்கள், ஆட்சியர்கள் கொண்டு வந்த ஆவணங்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்டு, அதன் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதும் நாட்டில் முதன்முறையாக அமலாக்கத்துறை ஆணையத்தில் மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அழைக்கவைக்கப்பட்ட சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மணல் மாபியாக்களின் கைப்பாவையாக அமைச்சர்கள் செயல்பட்டனதா என்று பல்வேறு தரப்பு எனவும் கேள்விகளை எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.