அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. குறிப்பாக, செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை எனக் கூறி ஜாமின் வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து, செந்தில் பாலாஜியும் அமைச்சராக பதவி வகித்து வருகிறார். மறுபுறம், வழக்கின் விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட விதிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி மீறும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாமின் வழங்கப்பட்ட பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டு முறை விசாரணைக்கு ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், ஜாமின் கிடைத்த பின்னர் இந்த வழக்கின் விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செயலாற்றுவதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டுகிறது. இவை உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகளை மீறும் வகையில் அமைகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவும் நிலுவையில் இருக்கிறது. தற்போது கூடுதல் மனு ஒன்றை அமலாக்கத்துறையும் தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.