தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் நடத்திய சோதனையின் அடிப்படையில், ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை இயக்குநரகம் (இ.டி) அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக, மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதில் கிடைத்த வருமானத்தை, சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில், நீர்வளத் துறை அதிகாரிகள் +மற்றும் மணல் குவாரி அதிபர்களின் வீடுகள் உள்ளிட்ட 34 இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், மணல் குவாரிகளில் நடத்திய சோதனையின் அடிப்படையில் ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக இ.டி தெரிவித்துள்ளது. அதில், ரூ.128.34 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், 209 எந்திரங்களும், ஒப்பந்ததாரர்களான சண்முகம் ராமச்சந்திரன், கருப்பையா ரத்தினம், பன்னீர் செல்வம் கரிகாலன் உள்ளிட்டோரின் 35 வங்கி கணக்குகளில் இருக்கும் ரூ.2.25 கோடி பணமும் முடக்கப்பட்டுள்ளதாக இ.டி தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, இந்த ரூ.130 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டது குறித்து, இ.டி விளக்கமளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“