தி.மு.க எம்.பி ஆ.ராசாவின் பினாமி நிறுவனங்கள் என்று கூறி 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியுள்ளது.
தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2010 செப்டம்பர் வரையில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.92 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக ஆ.ராசா மீது சி.பி.ஐ கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. அதில், ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, மருமகன் பரமேஷ், கோவை ஷெல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, ஆ.ராசாவின் நெருங்கிய கூட்டாளியான சாதிக் பாஷாவின் மனைவி ரெஹா பானு மற்றும் ஆ.ராசாவின் நண்பர்கள், உறவினர்கள் என மொத்தம் 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர், 2ஜி வழக்கு விசாரணையின்போது, பல்வேறு இடங்களில் சோதனை நடத்திய சி.பி.ஐ அதிகாரிகள், முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போது ஆ.ராசா உட்பட 6 பேர், ரூ.5.53 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக சி.பி.ஐ, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்தநிலையில், ஆ.ராசாவின் பினாமி நிறுவனங்கள் என்று கூறி 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்படி, தி.மு.க எம்.பி., ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளன. ஆ.ராசா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் கீழ் இந்த சொத்துக்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“