சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் 2-வது நாளாக இன்றும் (ஆகஸ்ட் 8) விசாரணையைத் தொடங்கி உள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து நேற்று முதல் அமலாக்கத் துறை விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 10 மணி நேரத்தைக் கடந்து நேற்று விடிய விடிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நாளொன்றுக்கு 50 கேள்விகள் என்ற அடிப்படையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சாஸ்திரி பவனில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. 5 நாட்களும் அங்கே வைத்து விசாரணை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சாஸ்திரி பவன் வளாகத்தை சுற்றிலும் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜுன் 14-ம் தேதி நள்ளிரவு கைது செய்தனர். இந்த கைது சட்ட விரோதம் எனக்கூறி செந்தில் பாலாஜி மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து 3-வது நீதிபதிக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து செந்தில் பாலாஜி கைதை உறுதி செய்தார். அமலாக்கத் துறைக்குக் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தார்.
இதையடுத்து மேகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத் துறை கைது செய்ய அதிகாரம் உள்ளது என்றும் விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, அமலாக்கத் துறை சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. விசாரணையின் போது செந்தில் பாலாஜியின் உடல்நலனை கருத்தில் கொள்வோம் எனவும் கூறியது. இதையடுத்து ஆகஸ்ட் 12-ம் தேதி வரை 5 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“