Enforcement Directorate | Madurai High Court: திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமலாக்கத்துறை அவர் மீது 2018-ல் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க ரூ.3 கோடி லஞ்சம் கொடுக்க வேண்டும் என மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி பேரம் பேசியுள்ளார்.
கைது
இதனையடுத்து, திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி 20 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுள்ளார். இதுதொடர்பாக டாக்டர் சுரேஷ் பாபு ஏற்கனவே அளித்த புகாரளித்த நிலையில், அங்கு வந்த திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தலைமையிலான காவல் துறையினர் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் காரிலிருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி, அவரையும் கைது செய்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை அடுத்து, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அங்கித் திவாரியின் வீடு உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தூங்க முடியாமல் தவித்த அவர், பின்னர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். மேலும் அலுவலகம், வீட்டில் சிக்கிய ஆவணங்கள் தொடர்பாக போலீஸ் காவலிலும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தள்ளுபடி - காவல் நீட்டிப்பு
இதற்கிடையில், மதுரை சிறையில் இருக்கும் அங்கித் திவாரிக்கு ஜாமீன் கேட்டு அவருடைய தரப்பில், திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருமுறையும், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒருமுறையும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த 3 ஜாமீன் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், கடந்த 80 நாட்களுக்கு மேலாக அவர் மதுரை மத்திய சிறையில் இருக்கிறார்.
நீதிபதி விலகல்
இந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரி மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி விவேக்குமார் சிங் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்றும், ஜாமீன் வழங்கினால் வழக்கு தீர்த்து போய்ந்துவிடும் என்று வாதிட்டார்.
அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் ஜாமீனுக்கான நிபந்தனைகள் குறித்தும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி கோபமடைந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வழக்கை விசாரிக்க தான் விரும்பவில்லை என்றும், விசாரணையில் இருந்து விலகுவதாகவும் நீதிபதி விவேக்குமார் அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“