அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான மதுரை அமலாக்கத்துறை அதிகாரிஅன்கித் திவாரியை விசாரிக்க 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் மொத்தம் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக, மதுரையைச் சோ்ந்த அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீசார் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி கைது செய்தனா்.
தொடர்ந்து மதுரை தபால்தந்திநகா் பகுதியில் உள்ள அமலாக்கத் துறை உதவி மண்டல அலுவலகத்தில், அங்கித் திவாரியின் அறையில் உள்ள கணினி, அவா் கையாண்ட வழக்குகள் தொடா்பான ஆவணங்கள், லேப்டாப், இ-மெயில், வங்கிப் பரிமாற்றம் குறித்தும், கைப்பேசியில் தொடா்பு கொண்டவா்கள் குறித்தும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினா்.
தமிழகத்தில் முதல் முறையாக மத்திய அரசு அலுவலகமான அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குள் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் நுழைந்து சோதனை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.
மேலும், மதுரை கோசாகுளம் பகுதியில் உள்ள அன்கித் திவாரியின் வீட்டிலும், லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் அவா் பயன்படுத்திய இரு லேப்டாப்களை பறிமுதல் செய்த போலீஸார், மேலும், சில ஆவணங்களையும் கைப்பற்றினா்.
இந்த வழக்கில் அங்கித் திவாரியை வருகிற 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜே.மோகனா உத்தரவிட்டு இருந்தார்.
இதற்கிடையே, அன்கித் திவாரியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, திண்டுக்கல் மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில், மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதையொட்டி, மதுரை சிறையில் இருந்து அன்கித் திவாரி அழைத்து வரப்பட்டு, முதன்மை நடுவர் நீதிமன்ற நீதிபதி மோகனா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, 3 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்த நீதிபதி, விசாரணையை முடித்து, வரும் 14-ம் தேதி மாலை 5 மணிக்குள் அன்கித் திவாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“