தமிழக அரசியல் களத்தில் அண்மைக் காலமாக அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) பல்வேறு துறைகளில், குறிப்பாக டாஸ்மாக் முறைகேடு வழக்கில் மேற்கொண்டு வந்த அதிரடி சோதனைகள் பெரும் பரபரப்பைக் கிளப்பின. டாஸ்மாக் உயர் அதிகாரிகள், முக்கிய அரசியல் புள்ளிகள், பணியாளர்கள் என பலரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட சோதனைகள் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
இந்த சோதனைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நீதிமன்ற தீர்ப்புகளுக்குப் பிறகும் அமலாக்கத்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த சூழலில், அமலாக்கத்துறையின் சென்னை மண்டலத்தின் முக்கிய அதிகாரிகள் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, டாஸ்மாக் வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.
யார் யார் மாற்றம்?
அமலாக்கத்துறையின் சென்னை மண்டல இணை இயக்குநராக இருந்த பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் வருமான வரித்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு அதிகாரிகளும் தமிழகத்தில் பல முக்கிய வழக்குகளில் அதிரடியான சோதனைகளையும், கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர்கள்.
குறிப்பாக கனிமவளக் கொள்ளை வழக்கு; டாஸ்மாக் வழக்கு; அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்பி கதிர் ஆனந்திற்கு எதிரான வழக்கு; முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு; செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அதிரடியான சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதிகாரிகள் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது, இது ஒரு சாதாரண நிர்வாக நடவடிக்கையா அல்லது இதன் பின்னணியில் ஏதேனும் அழுத்தங்கள் உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த பணியிட மாற்றங்கள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.