நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த அமலாக்கத்துறை விசாரணைப் பிறகு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் அவருக்கு 19 முறை நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.
செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளபோதும் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார். இந்நிலையில், 8 மாதங்களாக சிறையில் இருந்து வரும் சூழலில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி திங்கள்கிழமை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பான விசாரணை நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், விசாரணை முடியும் வரை ஜாமீன் வழங்க வேண்டும் என்ற அவரது மனுவை ஏற்காமல், விரைவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தியது.
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு. செந்தில் பாலாஜிக்கு எதிரான பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை துவங்க தயாராக இருக்கிறோம். செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்.
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார். செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும். நீண்ட காலமாக சிறையில் உள்ளதாக கூறும் செந்தில் பாலாஜிதான், விசாரணையை தொடங்க விடாமல் தாமதப்படுத்துகிறார். ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத்துறையின் வாதங்களை கேட்ட நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தப்போது, செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
வழக்கு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களைத் திருத்தவில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தவிர வேறு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஜாமின் மனு விசாரணைக்கு வருவதற்கு ஒருநாள் முன்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சாட்சிகள் இன்னும் விசாரிக்கப்படாததால் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக் கூடும். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், செந்தில் பாலாஜி செல்வக்கான நபர்தான். நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது. முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்க தயாராக உள்ளோம் என அமலாக்கத்துறை ஜாமீன் அளிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக இந்த வழக்கின் விசாரணை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.