Advertisment

இ.டி. ரெய்டு: ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பொன்முடிக்கு எதிரான வழக்கு என்ன?

பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கான காரணம் மற்றும் வழக்கின் பின்னணி என்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

author-image
WebDesk
New Update
ED raid at Ponmudi premises, ED raid at Ponmudi house, Jayalalitha's AIADMK ruling period old cases, பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை, அதிமுக் ஆட்சிக் காலத்தில் பொன்முடி வழக்கு, பொன்முடி வீட்டில் இ.டி. ரெய்டு, ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பொன்முடிக்கு எதிரான வழக்கு என்ன, Ponmudi, Jayalalitha, AIADMK ruling period

அமைச்சர் பொன்முடி

தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் அமைச்சர் பொன்முடி தொடர்புடைய இடங்களில் திங்கள்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்.பி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

Advertisment

அமைச்சர் பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு காரணம் என்ன என்று அமலாக்கத்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பொன்முடியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கான காரணம் மற்றும் வழக்கின் பின்னணி என்ன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

அமைச்சர் பொன்முடியின் வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை பி.எம்.எல்.ஏ சட்டத்தின் கீழ் நடப்பதாக கூறப்படுகிறது. கருப்பு பணத்தை வெள்ளையாக்கியதன் கீழ் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி பொன்முடி மகன் கௌதம சிகாமணி வெளிநாட்டில் செய்த முதலீடு ஒன்றுதான் நித சோதனைக்கு காரணம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கௌதம சிகாமணி ஆர்.பி.ஐ-யின் ஒப்புதல் இன்றி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் முதலீடு செய்துள்ளார். அங்கே இருக்கும் பி.டி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் கடந்த 2008-ல் முதலீடு செய்துள்ளார். இவர் சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு பங்குகளை வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் கருப்பு பணத்தை அவர் வெள்ளையாக்கியதாக அமலாக்கத்துறை சந்தேகப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் அடிப்படையில்தான் ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

இதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் விதமாக 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அப்போது அமைச்சராக இருந்த பொன்முடிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் கீழ் ரெய்டு நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் பொன்முடி அண்மையில், 2 முக்கிய வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

தற்போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, 1996 - 2001 ஆண்டுகளில் தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில், அரசுக்குச் சொந்த 3,630 சதுர அடி நிலத்தைப் பதிவுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன் முடி விடுதலை செய்யப்பட்டார்.

அதேபோல், 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.

அதே போல, தற்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் தி.மு.க ஆட்சியில், உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த அதே நேரத்தில், கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறையையும் கவனித்து வந்தார். அப்போது, அவரது மகன் கௌதம சிகாமணி, விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் தனது சொந்த பட்டா நிலத்தில் உள்ள செம்மண்ணை அள்ளுவதற்கு அரசின் அனுமதி கோரி விண்ணப்பித்தார்.

அமைச்சர் பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறையை கவனித்து வந்ததால், அவருடைய மகன் கௌதம சிகாமணி, அந்தப் பகுதியில் செம்மண் எடுக்க 2007 பிப்ரவரியில் விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான அனுமதி 2007 மே மாதத்தில், மிக குறுகிய காலக்கட்டத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

கௌதம சிகாமணிக்கு செம்மண் அள்ளுவதற்கு அனுமதி வாங்கியபோதே, அவருடன் சேர்ந்து, அவருடைய உறவினர்களான ராஜ மகேந்திரன் மற்றும் ஜெயச்சந்திரன் ஆகிய இருவரும் அனுமதி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் செம்மண் எடுத்ததாக பொன்முடி, அவருடைய மகன் கௌதம சிகாமணி, ராஜமகேந்திரன், லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச் சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீது 2012-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி செம்மண் குவாரியில் மணல் அள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் நீதிமன்றம் வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் குறித்து கீழமை நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடிக்கொள்ள உத்தரவிட்டது. அப்போது, கௌதம சிகாமணி உள்ளிட்டோர் தரப்பில், வழக்கை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்தில் விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கின் விசாரணையை வேலூர் மாவட்டத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. அதே நேரத்தில், விழுப்புரத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஜூன் 19-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி, செம்மண் குவாரியில் மணல் அள்ள அளிக்கப்பட்டஅனுமதியை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின்படி, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறி, கௌதம சிகாமணியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்தப் பின்னணியில்தான், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீடு, அலுவலகம் அவர் தொடர்புடைய இடங்கள் மற்றும் கௌதம சிகாமணி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Ponmudi Enforcement Directorate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment